ஆலமரமே சிவபெருமான்.. பரக்கலக்கோட்டை பொது ஆவுடையார் கோவில் சிறப்புகள்

திங்கட்கிழமைதோறும் இரவு மட்டுமே ஆலயத்தின் நடை திறக்கப்படுவதால், பிற நாட்களில் கருவறை கதவையே கடவுளாக எண்ணி பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர்.
Published on

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பரக்கலக்கோட்டையில் பிரசித்தி பெற்ற பொது ஆவுடையார் கோவில் உள்ளது.

தவத்தில் சிறந்து விளங்கிய வான்கோபர் மற்றும் மகாகோபர் என்ற இரு முனிவர்களும், 'இறைவனைச் சென்றடைய சிறந்த வழி இல்லறமா? துறவறமா?' என்று வாதிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது இறைவன் இத்தலத்தில் உள்ள வெள்ளால மரத்தின் கீழ் எழுந்தருளினார்.

பின்னர் அந்த முனிவர்களிடம் 'இல்லறமோ, துறவறமோ எதுவாயினும் அதற்குரிய நெறிமுறைகளைப் பின்பற்றினால் ஒன்றைவிட மற்றொன்று உயர்ந்ததும் இல்லை, தாழ்ந்ததும் இல்லை' என பொதுவாகத் தீர்ப்பு கூறினார். அதன்காரணமாகவே இத்தல இறைவன், 'பொது ஆவுடையார்' என்றும், மத்தியஸ்தம் செய்தவர் என்பதால் 'மத்தியபுரீஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார்.

இறைவன் சிதம்பரத்தில் நள்ளிரவு பூஜை முடித்த பிறகு, தனது பரிவாரங்களுடன் இத்தலத்து வெள்ளால மரத்தின் கீழ் எழுந்தருளி, அந்த மரத்திலேயே ஐக்கியமானார் என்கிறது தல புராணம். எனவே இத்தலத்தை குரு தலமாகவும் கருதலாம். இங்குள்ள தல மரத்தைச் சுற்றி சுவர் எழுப்பப்பட்டுள்ளது. சுவருக்கு உட்பட்ட பகுதியே கருவறையாகவும், ஆலமரமே சிவபெருமானாகவும் விளங்குகிறது. பக்தர்கள் ஆலமரத்தையே சிவபெருமானாக வழிபட்டு வருகின்றனர். மரமே மூர்த்தியாக விளங்குவது இக்கோவிலின் சிறப்பாகும்.

இக்கோவிலில் பகலில் நடை திறப்பதில்லை. திங்கள் கிழமைகள் இரவு மட்டுமே நடை திறக்கப்பட்டிருக்கும். சிதம்பரத்தில் அர்த்தஜாம பூஜை முடிந்ததும் நடராஜர் இங்கே வந்ததால், ஒவ்வொரு திங்கட்கிழமையும் இரவு 10.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நள்ளிரவு 12 மணிக்கு பூஜைகள் நடைபெறும். கார்த்திகை சோமவாரம் விசேஷமானது. அன்று இரவு 12 மணியளவில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் செய்யப்படுகின்றன.

மகர சங்கராந்தி தைப்பொங்கலன்று ஒரு நாள் மட்டும், அதிகாலையில் இருந்து மாலை 7 மணி வரையில், நாள் முழுதும் நடை திறக்கப்படுகிறது. அன்று சுவாமியின் மேனியில் சூரிய ஒளி விழுவது சிறப்பம்சமாகும்.

வாராவாரம் திங்கட்கிழமை இரவு மட்டுமே ஆலயத்தின் நடை திறக்கப்படுவதால், பிற நாட்களில் கருவறைக் கதவுக்கே பூஜை செய்யப்படுகிறது. அந்த கதவையே கடவுளாக எண்ணி பக்தர்கள் வழிபட்டு செல்கின்றனர்.

இந்த ஆலயத்தில் மேற்கு நோக்கி வீரசக்தி விநாயகர் சன்னிதியும், அருகில் திருக்குளமும் உள்ளன. அம்பாளுக்கென்று தனி சன்னிதி இல்லை. விநாயகர் சன்னிதிக்கு எதிரில் உள்ள புளிய மரத்தின் அடியில் அலங்கார உடையில் வான்கோபரும், துறவற உடையில் மகாகோபரும் வடக்கு நோக்கி தவக்கோலத்தில் வீற்றிருக்கும் சன்னிதிகள் உள்ளன. இந்த ஆலமரத்தின் இலைகள் மருத்துவ குணம் கொண்டவை. எனவே பக்தர்களுக்கு இலையும், திருநீறும் பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com