திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா: வாகன சேவைகள் விவரம்

பிரம்மோற்சவ விழாவின் ஒவ்வொரு நாளும் உற்சவர் மலையப்பசாமி எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழா: வாகன சேவைகள் விவரம்
Published on

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் 9 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடப்பது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா வருகிற 24-ந் தேதியில் இருந்து அடுத்த மாதம் (அக்டோபர்) 2-ந் தேதி வரை 9 நாட்கள் நடக்கின்றன. இதனையொட்டி வருகிற 23-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை அங்குரார்ப்பணம் எனப்படும் புற்றுமண் எடுத்து பூஜை செய்து, புற்றுமண்ணில் முளைப்பாரிக்காக நவதானிய விதைகளை தூவுகிறார்கள். பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி, பிரம்மோற்சவ விழா தொடங்கும் முந்தைய செவ்வாய்க்கிழமையான 16-ந் தேதி நடக்கிறது.

வாகன சேவை

பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு பிரமாண்ட வாகன சேவைகள் நடக்கின்றன. ஒவ்வொரு நாளும் இரு வாகனங்களில் உற்சவர் மலையப்பசாமி தனித்தும், உபய நாச்சியார்களுடன் சேர்ந்தும் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். வாகன சேவைகள் காலை 8 முதல் 10 மணி வரையிலும், இரவு 7 முதல் 9 மணி வரையிலும் நடக்கின்றன. 24-ந் தேதி மாலை 5.43 மணியில் இருந்து 6.15 மணி வரை மீன லக்னத்தில் கொடியேற்றம், இரவு 9 மணிக்கு பெரிய சேஷ வாகன வீதிஉலா, 25-ந்தேதி காலை 8 மணியளவில் சிறிய சேஷ வாகன வீதிஉலா, மதியம் 1 மணியில் இருந்து மாலை 3 மணி வரை ஸ்நாபன திருமஞ்சனம், இரவு 7 மணியளவில் ஹம்ச வாகன வீதிஉலா, 26-ந்தேதி காலை 8 மணியளவில் சிம்ம வாகன வீதிஉலா, மதியம் 1 மணியளவில் ஸ்நாபன திருமஞ்சனம், இரவு 7 மணியளவில் முத்துப்பந்தல் வாகன வீதிஉலா, 27-ந்தேதி காலை 8 மணியளவில் கல்ப விருட்ச வாகன வீதிஉலா, மதியம் 1 மணியளவில் ஸ்நாபன திருமஞ்சனம், இரவு 7 மணியளவில் சர்வ பூபால வாகன வீதிஉலா, 28-ந்தேதி காலை 8 மணியளவில் மோகினி அவதாரத்தில் பல்லக்கு வீதிஉலா, மாலை 6.30 மணியளவில் கருட வாகன (கருடசேவை) வீதிஉலா.

தீர்த்தவாரி

29-ந் தேதி காலை 8 மணியளவில் அனுமந்த வாகன வீதிஉலா, மாலை 4 மணியளவில் தங்கத்தேரோட்டம், இரவு 7 மணியளவில் யானை வாகன வீதிஉலா, 30-ந் தேதி காலை 8 மணியளவில் சூரிய பிரபை வாகன வீதி உலா, இரவு 7 மணியளவில் சந்திர பிரபை வாகன வீதிஉலா.

1.10.2025-ந்தேதி காலை 7 மணியளவில் தேர்த்திருவிழா (மரத் தேரோட்டம்), இரவு 7 மணியளவில் குதிரை வாகன வீதிஉலா, 2-ந்தேதி காலை 6 மணியில் இருந்து காலை 9 மணி வரை ஸ்ரீவாரி புஷ்கரணியில் சக்கர ஸ்நானம் எனப்படும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. அதைத்தொடர்ந்து இரவு 8.30 முதல் 10 மணி வரை கொடியிறக்கம் நடக்கிறது. இத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது. மேற்கண்ட தகவலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com