சிறுநீர் வெள்ளையாக நுரையுடன் வெளியேறினால் ஆபத்தா?

சிறுநீரில் அதிக அளவில் சில புரதங்கள் கலந்திருப்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சிறுநீரில் நுரை வரலாம்.
சிறுநீர் வெள்ளையாக நுரையுடன் வெளியேறினால் ஆபத்தா?
Published on

பொதுவாக ஆண்-பெண் யாராக இருந்தாலும் சிறுநீர் கழிக்கும்போது சற்று வெளிறிய மஞ்சள் நிறத்துடன் எந்தவித நுரையும் இல்லாமல்தான் சிறுநீர் வெளிவரும். நுரையுடன் எப்பொழுதாவது வந்தால் பிரச்சினை இல்லை. பெரிதாகக் கவலைப்பட வேண்டாம். ஆனால் எப்பொழுது சிறுநீர் கழித்தாலும் வெள்ளை நிறத்தில் நுரைநுரையாக வருகிறதென்றால் அது உடனடியாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம்.

சிறுநீரில் நுரை வர பல்வேறு காரணங்கள் உள்ளன. சிறுநீரில் அதிக அளவில் சில புரதங்கள் கலந்திருப்பது, உடலுக்கு தினமும் தேவைப்படும் தண்ணீரைக் குடிக்காமல் இருப்பது முக்கிய காரணமாகும். இது தவிர சிறுநீரக நோய்கள், நாள்பட்ட சர்க்கரை நோய், கல்லீரல் நோய்கள், புராஸ்டேட் சுரப்பி பிரச்சினை நோய்கள், உயர் ரத்த அழுத்தம் போன்றவற்றுக்கு மருந்துகள் எடுக்கும் போதும் சிலருக்கு சிறுநீர் நுரையுடன் வரலாம்.

இருப்பினும் கை, கால், முகம், வயிறு வீக்கம், உடல் தளர்வு, பசியின்மை, வாந்தி வருவது போன்ற உணர்வு, சரியான தூக்கமின்மை, சிறுநீரின் அளவு கூடுதல் மற்றும் குறைதல், மேக நிறத்தில் கலங்கிய நிலையில் சிறுநீர் கழித்தல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டால் உடனே மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

சிறுநீரில் அல்புமின் அளவு, ரத்தத்தில் கிரியாட்டினின் அளவு, சிறுநீரக ஸ்கேன் பரிசோதனை போன்றவை மூலம் சிறுநீரகம் எவ்வளவு துல்லியமாக செயல்படுகிறது என்பதைக் கண்டுபிடிக்கலாம்.

பொதுவாக இந்த பிரச்சினை தீர தினமும் போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம் போன்றவற்றை கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும். தினமும் உடலுழைப்பு, உடற்பயிற்சி இருக்க வேண்டும். சரிவிகித சத்துணவு சாப்பிட வேண்டும். உணவில் உப்பைக் குறைக்க வேண்டும். உணவில் புரதத்தை சரியான அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். சிறுநீரில் நுரை வந்தாலே, கிட்னி போய்விட்டது என்று பயப்பட வேண்டாம். ஒரு நாளைக்கு எத்தனை முறை நுரையுடன் சிறுநீர் கழிக்கிறீர்கள், உடலில் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா என்பதை பொறுத்து பாதிப்புகளை அறியமுடியும். எனவே பயம் வேண்டாம். சந்தேகம் இருந்தால் மருத்துவரை அணுகி உரிய ஆலோசனை பெறலாம். 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com