மாலையில் மீண்டும் உயர்வு... புதிய உச்சத்தில் தங்கம் விலை - நிலவரம் என்ன..?

கடந்த 10 மாதங்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.31 ஆயிரத்திற்கு மேல் உயர்ந்திருக்கிறது.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

அமெரிக்காவின் வர்த்தக போரால் அந்நாட்டு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்து வருகிறது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வது கணிசமாக குறைந்து, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித்துள்ளது. இதனால் தங்கத்தின் விலை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக மின்னல் வேகத்தில் உயர்ந்து வருகிறது.

இதன்படி கடந்த சில மாதங்களாக இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை அவ்வப்போது தொட்டு அதிர்ச்சி கொடுத்து வருகிறது. தொடர்ந்து உச்சத்துக்கு சென்றுகொண்டிருப்பதால் தங்கம் ஏழை-எளிய மக்களுக்கு எட்டாக்கனியாகவே மாறிவிட்டது.

கடந்த மாதம் 8-ந்தேதி ஒரு சவரன் ரூ.80,480-க்கு விற்பனையானது. அதன்பின்னரும் தங்கத்தின் விலை படிப்படியாக அதிகரித்து நேற்று முன்தினம் சவரன் ரூ.89,600-க்கு விற்பனையானது. நேற்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800-ம், மாலையில் ரூ.680-ம் அதிகரித்து ரூ.91,080-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்று காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.91,200-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்றும் மாலையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை மாலையில் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.91,400 என்ற புதிய உச்சத்தில் விற்பனையாகி வருகிறது. கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.11,425-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் தங்கம் ஒரு சவரன் ரூ.60 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த 10 மாதங்களில் மட்டும் ரூ.31 ஆயிரத்திற்கு மேல் விலை உயர்ந்திருக்கிறது. தங்கம் விலை வரலாறு காணாத புதிய உச்சத்தை அடைந்திருப்பது அனைத்து தரப்பு மக்களையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

தங்கம் விலையை போன்றே வெள்ளி விலையும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இன்று காலையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 அதிகரித்து கிராம் ரூ.171-க்கும், கிலோ ரூ.1 லட்சத்து 71 ஆயிரத்துக்கும் விற்பனையானது. இந்த நிலையில் மாலையில் அதிரடியாக கிராமுக்கு ரூ.6 அதிகரித்து ஒரு கிராம் ரூ.177-க்கும், கிலோ ரூ.1 லட்சத்து 71 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கம்-வெள்ளி விலை உயர்வு பொதுமக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com