

புதுடெல்லி,
டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு 200 பயணிகளுடன் நேற்று முன்தினம் இரவு 11 மணிகு ஒரு விமானம் புறப்பட தயாராக இருந்தது. ஆனால் விமானத்தில் மின்சார வினியோக அமைப்பு பழுதடைந்ததால் ஏ.சி சிஸ்டம் செயல்படவில்லை. இதனால் பயணிகள் கடும் வெப்பத்தால் மிகவும் சிரமப்பட்டனர். நீண்ட நேரமாகியும் பயணிகளுக்கு எந்த தகவலும் கொடுக்கவில்லை.
விமானத்தின் மின்சார வினியோக கோளாறும் சரி செய்யப்பட்டவில்லை. 2 மணி நேரத்துக்கு பிறகு விமானம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் இறக்கி விடப்பட்டு விமான நிலைய பயணிகள் அறையில் தங்க வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்கப்பட்டது. 6 மணி நேரம் தாமதத்துக்கு பின்னர் நேற்று அதிகாலை மாற்று விமானத்தில் பயணிகள் சிங்கபூர் அழைத்து செல்லப்பட்டனர்.இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்துக்கு வருந்துவதாக தெரிவித்தது.