கடலூர் கோர விபத்துக்கு கலெக்டரே காரணம்: தெற்கு ரெயில்வே குற்றச்சாட்டு

கடலூர் மாவட்ட கலெக்டர் கடந்த ஓராண்டாக அனுமதி அளிக்கவில்லை என தெற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.
கடலூர் கோர விபத்துக்கு கலெக்டரே காரணம்: தெற்கு ரெயில்வே குற்றச்சாட்டு
Published on

கடலூர்,

கடலூரில் செம்மங்குப்பம் அருகே கடலூர்-ஆலப்பாக்கம் இடையே பள்ளி வேன் ஒன்று குழந்தைகளை ஏற்றி கொண்டு இன்று காலை சென்று கொண்டிருந்தது. அப்போது, வழியில் ரெயில்வே கேட் ஒன்று இருந்தது. அதன் வழியே அந்த பள்ளி வேன் கடந்து செல்ல முயன்றது.

இந்நிலையில், பள்ளி வேன் சென்றபோது, அந்த பகுதியின் வழியே விழுப்புரத்தில் இருந்து மயிலாடுதுறை நோக்கி ரெயில் சென்றது. அது பள்ளி வேன் மீது மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில், வேன் பல மீட்டர் தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டது. இதில் வேனில் இருந்த குழந்தைகள் தூக்கி வீசப்பட்டனர். இந்த விபத்தில் பள்ளி மாணவ மாணவிகள் 3 பேர் பலியாகி உள்ளனர்.

இதுபற்றி தகவல் அறிந்து, அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி சென்று அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். போலீசாருக்கும், ஆம்புலன்சுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. வேன் ஓட்டுநர் மற்றும் பள்ளி குழந்தைகள் பலர் காயம் அடைந்து உள்ளனர். அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், விபத்துபற்றி தெற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள அறிவிப்பில், ரெயில்வேயின் முழு நிதியுதவியுடன் இந்த லெவல் கிராசிங்கிற்கு சுரங்க பாதை (அடிச்சாலை) அமைக்க தெற்கு ரெயில்வே முன்பே ஒப்புதல் அளித்து விட்டது. ஆனால், கடந்த ஓராண்டாக இதற்கு கடலூர் மாவட்ட கலெக்டர் அனுமதி அளிக்கவில்லை என தெரிவித்து உள்ளது.

இந்த துரதிர்ஷ்ட சம்பவத்தில், உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்த நபர்களுக்காக ரெயில்வே ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து கொள்வதுடன், இதற்காக மன்னிப்பும் கோருகிறது என தெரிவித்து உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com