

புவனேஷ்வர்,
ஒடிசா மாநிலம் மல்கங்கிரி மாஅவட்டம் கொடமட்டூரு கிராமத்தை சேர்ந்தவர் இர்மா ஷோகி (வயது 45). இவர் சத்தீஷ்காரின் சுக்மா மாவட்டத்தில் இருந்து ஆறு மூலம் தனது படகில் கொடமட்டூரு கிராமத்திற்கு பயணம் மேற்கொண்டார்.
கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இர்மா ஷோகியின் படகு நேற்று இரவு ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து, ஆற்றில் தத்தளித்த இர்மா ஷோகி ஆற்றின் மையப்பகுதியில் இருந்த பாறையில் ஏறி உயிர் பிழைத்தார். பின்னர், இரவு முழுவதும் ஆற்று வெள்ளத்தில் சிக்கி தவித்தார்.
இந்நிலையில், ஆற்றின் மையப்பகுதியில் உள்ள பாறையில் இர்மா ஷோகி சிக்கி நிற்பதை அப்பகுதி கிராமத்தினர் இன்று காலை பார்த்துள்ளனர். உடனடியாக தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் இர்மா ஷோகியை மீட்க முயற்சி எடுத்தனர். ஆனால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகமாக இருந்ததால் இர்மாவை மீட்க முடியவில்லை. இதையடுத்து, விமானப்படை ஹெலிகாப்டர் உதவியுடன் இர்மா ஷோகி மீட்கப்பட்டார். வெள்ளத்தில் சிக்கி 20 மணிநேரத்திற்குப்பின் இர்மா மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.