பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று விவாதம்

பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் ஆகிய பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் தொடங்குகிறது.
பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து நாடாளுமன்றத்தில் இன்று விவாதம்
Published on

புதுடெல்லி,

 கடந்த 21-ந் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணி ஆகியவை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தினமும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கடந்த வாரம் முழுவதும் அலுவல் எதையும் கவனிக்காமல் நாடாளுமன்றம் முடங்கியது. இதையடுத்து, மத்திய அரசுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது.

பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் ஆகிய பிரச்சினைகள் குறித்து 28-ந் தேதியில் (இன்று) இருந்து விவாதத்தை தொடங்க எதிர்க்கட்சிகள் ஒப்புக்கொண்டன. மக்களவையில் இன்றும், மாநிலங்களவையில் நாளையும் (செவ்வாய்க்கிழமை) விவாதம் தொடங்குகிறது. இரு அவைகளிலும் தலா 16 மணி நேரம் விவாதம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நேரம் நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்நிலையில், திட்டமிட்டபடி, மக்களவையில், பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் ஆகிய பிரச்சினைகள் குறித்து இன்று விவாதம் நடக்கிறது. பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும், எதிர்க்கட்சிகளும் தங்கள் தரப்பில் தீவிரமாக பேசக்கூடிய தலைவர்களை களத்தில் இறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளுங்கூட்டணி தரப்பில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோர் பங்கேற்று பேசுவார்கள். பிரதமர் மோடி, தேச பாதுகாப்பு தொடர்பான தனது அரசின் வலுவான நிலைப்பாடு பற்றி அவ்வப்போது குறுக்கிட்டு பேசுவார் என்று தெரிகிறது.

எதிர்க்கட்சிகள் தரப்பில், இரு அவைகளின் எதிர்க்கட்சி தலைவர்களான ராகுல்காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் தங்கள் வாதங்களை முன்வைப்பார்கள்.இந்தியா-பாகிஸ்தான் சண்டையை நிறுத்தியது நான்தான் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் திரும்பத்திரும்ப கூறி வருவதன் அடிப்படையிலும் மத்திய அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன. இந்த கருத்துகளை முன்வைத்து, மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுக்கும் என்று கருதப்படுவதால்,  நாடாளுமன்றத்தில் அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com