முதுநிலை நீட் தேர்வை ஆக.3-ல் நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி

முதுகலை நீட் தேர்வை ஒரே ஷிப்ட்டில் நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருந்தது.
முதுநிலை நீட் தேர்வை ஆக.3-ல் நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
Published on

புதுடெல்லி,

வருகிற ஜூன் 15ஆம் தேதி நீட் முதுகலைப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. 2,42, 678 தேர்வர்கள் நீட் முதுகலைத் தேர்வை எழுத இருந்தனர். தேர்வு இரண்டு ஷிப்டுகளாகத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதை எதிர்த்து மருத்துவர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மருத்துவ வாரியம் தன்னிச்சையாக முடிவு எடுக்கக் கூடாது என்று தெரிவித்த சுப்ரீம் கோர்ட்டு, ஒரே ஷிப்ட்டில் தேர்வை நடத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து, 2 கட்டங்களாக நடைபெறவிருந்த நீட் முதுநிலைத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக தேசிய தேர்வுகள் வாரியம் அறிவித்துள்ளது.

நீட் முதுநிலை தேர்வை ஒரே கட்டமாக நடத்த வேண்டுமென சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்த நிலையில், ஒரே கட்டமாக ஆன்லைனில் தேர்வுக்கு ஏற்பாடு செய்ய அவகாசம் தேவை என்பதால் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்வு வாரியம் தரப்பில் வாதிடுகையில், 2.20 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதுகின்றனர். தேர்வை ஒரே ஷிப்ட் அடிப்படையில் நடத்தினால், தற்போது உள்ள தேர்வு மையங்களை விட 450 கூடுதல் மையங்கள் தேவைப்படும். எனவே தேர்வை ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடத்த அனுமதிக்க வேண்டும். தேர்வு மையங்களை கண்டறிந்து அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள கூடுதல் அவகாசம் தேவைப்படுகிறது என்றது.

தொடர்ந்து பேசிய நீதிபதிகள், கூடுதல் கால அவகாசம் வழங்கி உத்தரவிடப்படுகிறது. நீட் முதுநிலைத் தேர்வை ஆகஸ்ட் 3 ஆம் தேதி நடத்தலாம். ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்கு பிறகு கூடுதல் அவகாசம் வழங்கப்படாது. அன்றே தேர்வை நடத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com