ரெயில் குண்டு வெடிப்பு வழக்கு: விடுவிக்கப்பட்டவரின் கல்லறையில் தீர்ப்பு நகலை வாசித்து குடும்பத்தினர் உருக்கம்

கமல் முகமது அன்சாரி விடுதலை செய்யப்பட்டதற்கான மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு நகலை கல்லறை முன்பு அவரது தம்பி வாசித்தார்.
ரெயில் குண்டு வெடிப்பு வழக்கு: விடுவிக்கப்பட்டவரின் கல்லறையில் தீர்ப்பு நகலை வாசித்து குடும்பத்தினர் உருக்கம்
Published on

மும்பை,

மும்பையில் கடந்த 2006-ம் ஆண்டு நடந்த தொடர் ரெயில் குண்டு வெடிப்பில் 209 பேர் உயிரிழந்தனர். ரெயில் குண்டு வெடிப்பு வழக்கை விசாரித்த சிறப்பு கோர்ட்டு கமல் அகமது அன்சாரி உள்ளிட்ட 5 பேருக்கு தூக்கு தண்டனையும், 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கியது. சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில் கமல் முகமது அன்சாரி கடந்த 2020-ம் ஆண்டு உயிரிழந்தார். இந்தநிலையில் சமீபத்தில் மும்பை ஐகோர்ட்டு ரெயில் குண்டு வெடிப்பு வழக்கில் கமல் முகமது அன்சாரி உள்ளிட்ட 12 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு கூறியது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் கமல் முகமது அன்சாரியின் தம்பி ஜமால் அகமது மற்றும் குடும்பத்தினர் நாக்பூரில் உள்ள கமல் முகமது அன்சாரி கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்தினர். மேலும் ஜமால் அகமது கண்ணீருடன் கமல் முகமது அன்சாரி விடுதலை செய்யப்பட்டதற்கான மும்பை ஐகோர்ட்டு தீர்ப்பு நகலை கல்லறை முன்பு வாசித்தார்.

இது குறித்து ரெயில் குண்டு வெடிப்பு வழக்கில் பிடிபட்டு கோர்ட்டால் விடுதலை செய்யப்பட்ட டாக்டர் அப்துல் வாகித் சேக் கூறுகையில், கோர்ட்டு கமல் முகமது அன்சாரியை விடுதலை செய்துவிட்டது. ஆனால் அவர் ஜெயிலில் கழித்த 16 ஆண்டுகளுக்கு யார் பதில் சொல்வார்கள்?. தந்தை இல்லாமல் அவரது குழந்தைகள் வளர்ந்து உள்ளன. அவரது மனைவி அவமானத்துக்கு இடையே வாழ்ந்து வந்தார்," என்றார். கமல் முகமது அன்சாரி பீகார் மாநிலம் மதுபானி பகுதியை சேர்ந்தவர் ஆவார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com