கூலி வேலைக்கு சென்ற பழங்குடியின பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் - காட்டில் இரவு முழுவதும் உயிருக்கு போராடிய பரிதாபம்

மோசமான காயங்களால் பாதிக்கப்பட்டிருந்த பழங்குடியின பெண் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கூலி வேலைக்கு சென்ற பழங்குடியின பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் - காட்டில் இரவு முழுவதும் உயிருக்கு போராடிய பரிதாபம்
Published on

அமராவதி,

ஆந்திரா மாநிலம் மெதக் மாவட்டம் கொள்சாரம் மண்டலத்தில் அப்பாஜி பள்ளி என்னும் சிறு கிராமம் உள்ளது. இங்கு ஊருக்கு ஒதுக்குப்புறமான காட்டுப் பகுதியில் ஒரு பெண் நிர்வாண நிலையில் காயங்களுடன் கிடப்பதை நேற்று முன்தினம் கிராம மக்கள் சிலர் பார்த்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனே துணை போலீஸ் சூப்பிரண்டு பிரசன்ன குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு ஒரு பெண் நிர்வாண நிலையில் உடலில் காயங்களுடன் வலிதாங்காமல் முணகிக் கொண்டிருப்பதை கண்டனர். உடனடியாக அந்தப் பெண்ணை மீட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றி மெதக் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். தகவல் அறிந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவரும், உறவினர்களும் ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தனர்.

பிறகு தீவிர சிகிச்சைக்காக அந்த பெண்ணை, ஐதராபாத் காந்தி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார். இதுகுறித்து பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள் போலீசில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

போலீசாரின் முதல்கட்ட விசாரணையில், காட்டில் காயங்களுடன் நிர்வாணமாக கிடந்தது பழங்குடியின பெண் என்றும், அவர் கடந்த வெள்ளிக்கிழமை கூலி வேலைக்காக அந்த கிராமத்துக்கு வந்துள்ளார். அவரிடம் யாரோ சிலர் பேச்சு கொடுத்து காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.

அங்கு பெண்ணை அவரது சேலையால் மரத்தில் கட்டி வைத்ததுடன், அவரை நிர்வாணப்படுத்தி பாலியல் கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். இதில் தீவிர காயம் அடைந்த அந்த பெண் விடிய விடிய இரவு முழுவதும் நிர்வாணமாகவும், காயங்களின் வலியுடனும், உணவின்றியும் உயிருக்காக போராடி உள்ளார். மறுநாள் கிராம மக்கள் பார்த்த பின்னர், மோசமாக பாதிக்கப்பட்டிருந்த அவர் ஆஸ்பத்திரியில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

பழங்குடியின பெண்ணை, கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த கொடூர குற்றவாளிகள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும், குற்றவாளிகளை விரைவில் பிடித்து விடுவோம் என்றும் போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com