திருப்பதி கோவிலில் ரூ.100 கோடி திருட்டா? ஆந்திராவில் பரபரப்பு

கோவில் ஊழியர் ரவிக்குமார் என்பவர் உண்டியலில் இருந்து பணத்தைத் திருடியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருப்பதி கோவிலில் ரூ.100 கோடி திருட்டா? ஆந்திராவில் பரபரப்பு
Published on

அமராவதி,

ஆந்திராவில் முந்தைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் திருப்பதி தேவஸ்தான உண்டியலில் இருந்து 100 கோடி ரூபாய்க்கும் மேல் கொள்ளையடிக்கப்பட்டதாக பாஜக மூத்த தலைவர் பானு பிரகாஷ் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்

கோவில் ஊழியர் ரவிக்குமார் என்பவர் உண்டியலில் இருந்து பணத்தைத் திருடியதாகக் கூறி, அதற்கு ஆதாரமாக சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு இருக்கிறார். பானு பிரகாஷ் ரெட்டி திருமலை திருப்பதி தேவஸ்தான உறுப்பினராகவும் இருக்கிறார். கொள்ளையடிக்கப்பட்ட உண்டியல் பணம் ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யப்பட்டது என்று குற்றம் சாட்டிய பானு பிரகாஷ் ரெட்டி, இந்தப் பணம் ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லமான தடேபள்ளி அரண்மனைக்கு அனுப்பப்பட்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக ரவிக்குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், லோக் அதாலத் மூலம் சமரசம் செய்யப்பட்டு ரவிக்குமாரின் சொத்துகளில் பாதியை கோயில் நிர்வாகம் எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், காவல் துறை உயரதிகாரிகள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் சிலர் ரவிக்குமாரை மிரட்டி மீதமுள்ள சொத்துக்களை தங்களது உறவினர்களின் பெயரில் எழுதிக் கொண்டதாக சொல்லப்படுகிறது.

இதுதொடர்பாக தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பானு பிரகாஷ் ரெட்டி, ஆந்திரப்பிரதேச ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, லோக் அதாலத் வழங்கிய சமரச தீர்ப்பை ரத்து செய்ததுடன், வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்க உத்தரவிட்டது. மேலும், வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்கள், பழைய அறங்காவலர் குழு நிறைவேற்றிய தீர்மான நகல் உள்ளிட்டவற்றை சீலிடப்பட்ட கவரில் வைத்து தாக்கல் செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com