சென்னை நட்சத்திர ஓட்டலில் போதை விருந்துடன் நடனம்; இசையமைப்பாளர் மகள் உள்பட 18 பேர் கைது

கைதானவர்களில் பிரவல்லிகா என்பவர் பிரபல இசையமைப்பாளரின் மகள் ஆவார்.
சென்னை நட்சத்திர ஓட்டலில் போதை விருந்துடன் நடனம்; இசையமைப்பாளர் மகள் உள்பட 18 பேர் கைது
Published on

சென்னை,

சென்னை கீழ்ப்பாக்கம் ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் கஞ்சா போதைப்பொருள் விருந்து நடப்பதாகவும், அதில் ஏராளமான பேர் கலந்துகொண்டு நடனமாடுவதாகவும், போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக அந்த குறிப்பிட்ட நட்சத்திர ஓட்டலுக்கு போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசாரும் கீழ்ப்பாக்கம் போலீசாரும் விரைந்துசென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு ஏராளமான பேர் ஒரு அறையில் நடனமாடி கொண்டிருந்தனர். அவர்களுக்கு கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் பரிமாறப்பட்டுள்ளது. மேலும், கஞ்சா போதையில் அவர்கள் உற்சாகமாக நடனமாடியது தெரியவந்தது. கஞ்சா விருந்தில் கலந்துகொண்ட 3 பெண்கள் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். குறிப்பிட்ட ஓட்டலின் மேலாளர் சுகுமார் என்பவரும் கைது செய்யப்பட்டார்.

கைதானவர்களில் பிரவல்லிகா (வயது 23) என்பவர் பிரபல இசையமைப்பாளரின் மகள் ஆவார். பெங்களூருவை சேர்ந்த இவர், சென்னை சூளைமேட்டில் உள்ள பெண்கள் விடுதியில் தங்கி உள்ளார். கைதானவர்களிடம் இருந்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அவர்களை எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தியதாகவும், கோர்ட்டு அவர்களை ஜாமீனில் விடுவித்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com