அடுத்த பா.ஜ.க. தலைவர் யார்..? பரபரப்பான அரசியல் சூழலில் இன்று சென்னை வருகிறார் அமித்ஷா

2 நாள் பயணமாக மத்திய மந்திரி அமித்ஷா இன்று சென்னை வருகிறார். தேர்தல் கூட்டணி தொடர்பாக முக்கிய தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.
அடுத்த பா.ஜ.க. தலைவர் யார்..? பரபரப்பான அரசியல் சூழலில் இன்று சென்னை வருகிறார் அமித்ஷா
Published on

சென்னை,

தமிழகத்துக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று (வியாழக்கிழமை) இரவு சென்னை வருகிறார். அதன்பிறகு நாளை பா.ஜ.க. நிர்வாகிகளுடன் ஆலேசனை நடத்த உள்ளார்.

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளநிலையில், கடந்த மாதம் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசினார். தொடர்ந்து டெல்லி சென்ற தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, அமித்ஷா மற்றும் பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை சந்தித்து கூட்டணி தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே மாநில தலைவர் பொறுப்பில் இருந்து அண்ணாமலை மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியானது. இந்த சூழலில் தமிழகத்தின் புதிய பா.ஜ.க. தலைவருக்கான பேட்டியில் அண்ணாமலை தான் இல்லை என்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறி இருந்தார். இதனால் அந்த பொறுப்புக்கு நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் டெல்லியில் இருந்து அமித்ஷா தனி விமானம் மூலம் இன்று சென்னை வருகிறார்.

சென்னை விமான நிலையத்துக்கு இரவு 10.15 மணிக்கு வரும் அவர் அங்கிருந்து கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு செல்கிறார். அங்கு, எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் உள்பட முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். இன்றைய தினம் இரவு ஓட்டலிலேயே தங்குகிறார்.

நாளை (வெள்ளிக்கிழமை) தமிழக பா.ஜனதாவின் மூத்த தலைவர்கள், நிர்வாகிகளை சந்தித்து மாநில தலைவர் நியமனம் மற்றும் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த இருப்பதாக பா.ஜனதா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதையடுத்து அன்றைய தினம் மாலை 6 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மீண்டும் அமித்ஷா டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

இதனிடையே தெலுங்கானா முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனின் தந்தை குமரி அனந்தனின் மறைவுக்கு, சாலிகிராமத்தில் உள்ள தமிழிசையின் வீட்டுக்கு நேரில் சென்று அமித்ஷா ஆறுதல் கூற இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com