

திருச்சி,
2026-ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற தலைப்பில் அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் திருச்சி மாவட்டத்தில் மாநகர், வடக்கு, தெற்கு ஆகிய பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) முதல் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வரை 3 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.
இதையொட்டி இன்று காலை 11 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு வரும் எடப்பாடி பழனிசாமிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து விமான நிலையத்தில் இருந்து அவர் காரில் புறப்பட்டு மத்திய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்று அங்கு ஓய்வு எடுக்கிறார். பின்னர் கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசுகிறார்.
இதையடுத்து சிறிதுநேர ஓய்வுக்கு பிறகு அவர், ஓட்டலில் இருந்து புறப்பட்டு மாலை 4 மணிக்கு திருவெறும்பூர் தொகுதியில் திருவெறும்பூர் பஸ் நிலையம் அருகே பிரசாரம் செய்கிறார். அதன்பிறகு திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காந்திமார்க்கெட் மரக்கடை அருகே மாலை 5.30 மணிக்கு பொதுமக்கள் முன்னிலையில் உரையாற்றுகிறார். இதனை தொடர்ந்து அங்கிருந்து அவர் லால்குடிக்கு சென்று அங்கு இரவு 7 மணி அளவில் பிரசாரம் செய்கிறார்.
பின்னர் நாளை (ஞாயிற்றுக்கிழமை) திருச்சி புறநகர் வடக்கு மாவட்டத்துக்கு உட்பட்ட மண்ணச்சநல்லூர் கடைவீதியில் மாலை 4 மணி அளவில் பிரசாரத்தை தொடங்கும் எடப்பாடி பழனிசாமி, அதனை தொடர்ந்து துறையூர் மற்றும் முசிறியிலும் பிரசாரம் செய்கிறார். நாளை மறுநாள் (திங்கட்கிழமை) மாலை 5 மணி அளவில் திருச்சி மணப்பாறை பகுதியிலும், மாலை 6.30 மணி அளவில் திருச்சி மாநகரில் புத்தூர் நால்ரோடு பகுதியிலும், இரவு 8 மணி அளவில் ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகிலும் தீவிர பிரசாரம் செய்கிறார்.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருச்சியில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 3 நாட்கள் தொடர் பிரசாரம் செய்வதால், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். திருச்சி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் விதமாக பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. பிரசாரம் நடைபெறும் இடங்களில் கொடி, தோரணங்கள், அலங்கார வளைவுகள், பிரமாண்ட கட்-அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், எடப்பாடி பழனிசாமி பிரசாரத்துக்கு செல்லும் இடங்களில் வழிநெடுகிலும் தொண்டர்கள் திரண்டு நின்று அவரை வரவேற்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.