இன்று மதுரை வருகிறார் உள்துறை மந்திரி அமித்ஷா

மதுரையில் நாளை நடைபெறும் பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேச இருக்கிறார்.
இன்று மதுரை வருகிறார் உள்துறை மந்திரி அமித்ஷா
Published on

மதுரை,

தமிழக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன. பா.ஜனதா கட்சியும் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, டெல்லியில் இருந்து தனி விமானத்தில் இன்று (சனிக்கிழமை) புறப்பட்டு, இரவு 8.30 மணி அளவில் மதுரை வருகிறார். அதன்பின்னர் சிந்தாமணி பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் இரவு தங்குகிறார்.

நாளை பகல் 11 மணி அளவில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார். பிற்பகல் 3 மணி அளவில் பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் பேச இருக்கிறார். இதில் கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் மாவட்ட தலைவர்கள், பார்வையாளர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மண்டல நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்பட 15 ஆயிரம் பேர் வரை கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது.

இந்த கூட்டம் நடைபெறும் இடத்தில் மடை அமைக்க பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கினார். அவருடன் கட்சியின் மூத்த நிர்வாகிகள், மதுரை மாவட்ட நிர்வாகிகள் இணைந்து பந்தக்கால் ஊன்றினர்.

அமித்ஷா வருகையையொட்டி, பாதுகாப்பு குறித்த ஆலோசனை கூட்டம் மதுரை விமான நிலையத்தில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில், மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் வனிதா, இனிகோ திவ்யன், விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார், விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை கமாண்டன்ட் விஸ்வநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அமித்ஷா செல்ல இருப்பதால், அங்கு செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் கோவில் இணை கமிஷனர் கிருஷ்ணன் மற்றும் போலீஸ் அதிகாரிகள், மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதே போல் பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் இடத்திலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com