விஜயகாந்துக்கு மனைவியாக வாழ்ந்ததைவிட, அவருக்கு தாயாக தான் வாழ்ந்திருக்கிறேன்: பிரேமலதா உருக்கம்

தமிழ் மீது நீங்காத பற்று கொண்டவர் விஜயகாந்த் என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
விஜயகாந்துக்கு மனைவியாக வாழ்ந்ததைவிட, அவருக்கு தாயாக தான் வாழ்ந்திருக்கிறேன்: பிரேமலதா உருக்கம்
Published on

திண்டுக்கல்,

திண்டுக்கல்லில் நடைபெற்ற தே.மு.தி.க. பொதுக்கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:-

திண்டுக்கல் என்று சொன்னாலே அது 'தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் கோட்டை' என்று சொன்னால் அது மிகையல்ல. தலைவருடன் நான் திண்டுக்கல்லுக்கு வரும்போதெல்லாம் மக்கள் வெள்ளம் தான் அவரை வரவேற்கும். அத்தனை பாசம் கொண்டவர்கள் திண்டுக்கல் மக்கள். எனக்கும், மறைந்த தே.மு.தி.க. தலைவருக்கும் மிகவும் பிடித்த மாவட்டம் திண்டுக்கல் தான்.

திண்டுக்கல் பிரியாணி உலகம் முழுவதும் பிரசித்தி பெற்றது. உலகில் எந்த நாட்டுக்கு நாம் சென்றாலும் அங்கும் திண்டுக்கல் பிரியாணி கிடைக்கும். நமது தலைவருக்கும் பிடித்த உணவு திண்டுக்கல் பிரியாணி. அவர் திண்டுக்கல்லுக்கு வரும் போதெல்லாம் திண்டுக்கல் பிரியாணியை சுவைக்காமல் திரும்ப மாட்டார்.

நமது தலைவர் எங்கும் செல்லவில்லை. 'என் மக்களே என் மக்களே' என்று உங்களுக்காகவே உழைத்து, உங்களுக்காகவே வாழ்ந்து உங்களுக்காகவே மறைந்தவர் விஜயகாந்த். கட்சி நிர்வாகிகள் இன்று (நேற்று) எனது பிறந்தநாள் என்று கூறுகிறார்கள். எனக்கென்று எந்த விழாவும் இல்லை. நமது தலைவர் என்றைக்கு மறைந்தாரோ, அன்றே என்னுடைய எல்லா விழாக்களும் முடிந்து விட்டது. இனி நான் வாழும் வாழ்வு உங்களுக்காக தான். என் மக்களுக்காக தான்.

நமது தலைவர் விஜயகாந்த், தமிழ் மீது நீங்காத பற்று கொண்டவர். அவர் நினைத்து இருந்தால் எத்தனையோ மொழி படங்களில் நடித்திருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை. தமிழ் மொழியில் மட்டுமே நடிப்பேன் என்று காலம் முழுவதும் வாழ்ந்து காட்டியவர். நமது தலைவர் விஜயகாந்தை நான் திருமணம் செய்து 32 ஆண்டுகள் வாழ்ந்த காலத்தில் அவருடைய மனைவியாக வாழ்ந்ததைவிட அவருக்கு தாயாக தான் வாழ்ந்திருக்கிறேன். அவரை 'என் செல்லக்குட்டி' என்று தான் அழைப்பேன். (இப்படி கூறும் போதே குரல் தழு, தழுத்து அழுதார்). நமது தலைவரை தவற விட்டுவிட்டோமே என்று வருந்தாதீர்கள். மீண்டும் ஒரு வாய்ப்பு வரும். அன்று நீங்கள் நமது தலைவரின் பிள்ளைகள் என்பதை உங்கள் ஒற்றை விரலால் நிரூபித்து காட்டுங்கள் என்று உங்களை நான் கேட்டுக்கொள்கிறேன்.

திண்டுக்கல் பெயரளவில் தான் மாநகராட்சியாக இருக்கிறது. எந்த அடிப்படை வசதியும் இல்லை. சிறுமலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெடிகுண்டு வெடித்த சம்பவம் நடந்தது. யார் அந்த குண்டுவெடிப்புக்கு காரணமானவர்கள் என்று சொல்லாமல் விவசாயத்துக்கு கொண்டு சென்ற வெடிபொருள் வெடித்து இந்த சம்பவம் நடந்தது என்று கூறுகிறார்கள். இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைத்த கதை போல் இருக்கிறது. சட்டம், ஒழுங்கை சீர்படுத்தி மக்களை காக்க வேண்டும். இந்த பொறுப்பு தமிழக அரசுக்கும் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com