மதுரை தவெக மாநாடு மாற்றம்? - இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது

மாநாட்டு பணிகளை ஆய்வு செய்வதற்காக, கடந்த 29-ந்தேதி கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மதுரை வந்தார்.
மதுரை தவெக மாநாடு மாற்றம்? - இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகிறது
Published on

சென்னை,

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் கடந்த ஆண்டு நடந்தது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் வருகிற 25-ந் தேதி நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதையொட்டி மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை எலியார்பத்தி சுங்கச்சாவடி பகுதி அருகே உள்ள பாரபத்தி பகுதியில் மாநாட்டிற்கான பூமி பூஜை நடந்தது. தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், மாநாட்டிற்கு அனுமதி பெறுவதற்காக மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து போலீஸ் சூப்பிரண்டு அர்விந்தை சந்தித்து மனு அளித்தனர். மேலும், மாநாட்டிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தார்.

இந்தநிலையில், மாநாட்டு பணிகளை ஆய்வு செய்வதற்காக, கடந்த 29-ந்தேதி கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் மதுரை வந்தார். அப்போது அவர் போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து பேசினார். அப்போது போலீஸ் தரப்பில், மாநாடு நடைபெறும் 25-ந்தேதியை தொடர்ந்து 27-ந்தேதி விநாயகர் சதுர்த்தி வர இருப்பதாகவும், அதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டியதிருப்பதால், மாநாடு நடைபெறும் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

இதற்கு புஸ்சி ஆனந்த் தரப்பில், கட்சி தலைமையிடம் கேட்டு முடிவு செய்கிறோம் என கூறிவிட்டு சென்றனர். இதனால், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு குறிப்பிட்ட அந்த தேதியில் நடைபெறுமா? அல்லது தேதி மாற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே, நேற்று மதுரை வந்த புஸ்சி ஆனந்த், மீண்டும் 3-வது முறையாக போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து, மாநாடு தேதி தொடர்பாக பேசினார்.

பின்னர் வெளியே வந்த புஸ்சி ஆனந்த் நிருபர்களிடம் கூறுகையில், 'விநாயகர் சதுர்த்தி 27-ந் தேதி வருவதால், பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல்கள் இருக்கும் என கூறி காவல்துறை சார்பில் த.வெ.க. மாநாடு தேதியை மாற்றுவதற்கு கேட்டிருந்தார்கள். அதன்படி, வருகிற 18-ந் தேதி முதல் 22-ந்தேதி வரை ஒரு தேதியை நீங்கள் கொடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தார்கள். இதனால், அவர்கள் கூறிய அந்த தேதிகளில் ஒரு தேதியை தேர்வு செய்து மாநாடு நடத்த அனுமதி கேட்டு மனு கொடுத்திருக்கிறோம். அந்த தேதி தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை நாளை (அதாவது இன்று) தலைவர் அறிவிப்பார்' என்றார்.

நிர்ணயித்த தேதிக்கு முன்பாகவே மாநாடு நடக்க இருப்பதால், மாநாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், வருகிற 21-ந்தேதி மாநாடு நடத்தப்படும் என கட்சி நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com