

சென்னை,
சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-
பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக்கூட்டம் மேயர் ஆர்.பிரியா தலைமையில் இன்று (12.09.2025) ரிப்பன் கட்டட வளாக கூட்டரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மேயர் பேசும்போது தெரிவித்ததாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகின்ற 44 கால்வாய்களிலும், ஆகாயத்தாமரைகளை அகற்றி தூர் வாரும் பணிகளை துரிதப்படுத்தி முடிக்க வேண்டும். தற்போது கால்வாய்களில் நடைபெற்று வரும் தடுப்புச் சுவரினை உயர்த்திக் கட்டுதல் , தரைத்தளம் கான்கிரீட் அமைத்தல் உள்ளிட்ட மேம்பாட்டுப் பணிகளை விரைவாக முடித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நீர் நிலைகளைப் புனரமைக்கும் பணிகளை விரைவுபடுத்தி முடித்திட வேண்டும். மழை நீர் வடிகால்வாய்கள் மற்றும் வண்டல் வடிகட்டித் தொட்டிகளில் உள்ள வண்டல்களை அகற்றி தூர்வாரிட வேண்டும். ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில் உள்ள மரக்கிளைகளை அகற்றும் பணியினை விரைவுபடுத்தி முடித்திட வேண்டும். அனைத்து சுரங்கப்பாதைகளிலும் மழைநீர்த் தேக்கமின்றி போக்குவரத்து சீராகச் செல்வதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக அப்பகுதிகளில் மழைநீர்த் தேக்கத் தொட்டி மற்றும் மோட்டார் பம்புகளை தயார் நிலையில் வைக்க வேண்டும்.
மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தக் கூடிய அனைத்து வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் உள்ளிட்ட கருவிகளை இப்பொழுதே சரி பார்த்து பயன்பாட்டில் வைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மழைக்கால நிவாரண முகாம்களையும், உணவு தயாரிக்கும் சமையல் கூடங்களையும் உரிய அடிப்படை வசதிகளுடன் தயார் நிலையில் வைத்திட வேண்டும்.
மழைநீர் வடிகால்வாய் பணிகளையும், விடுபட்ட இடங்களில் மழைநீர் கால்வாய் இனணப்பு ஏற்படுத்தும் பணிகளையும் விரைந்து மேற்கொண்டு மழைநீர் தங்கு தடையின்றி செல்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். தேவையான அளவிற்கு மோட்டார்களை தயார் நிலையில் வைத்திட வேண்டும். மேலும் தற்போது நடைபெற்று வரும் சாலைப்பணிகளை இம்மாத இறுதிக்குள் முடித்திட வேண்டும். சாலை வெட்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ள இடங்களில் உடனடியாக சாலைப் பணிகளை முடித்திட வேண்டும். சாலைப் பணிகளுக்காக பழைய சாலையை அகழ்ந்தெடுக்கும் பணிகளை மேற்கொள்ளும் போது உடனடியாக சாலை அமைத்து மக்களுக்கு சீரான போக்குவரத்தை ஏற்படுத்திட வேண்டும்.
வடகிழக்குப் பருவ மழையின் போது தேவையான அளவிற்கு மருந்துகள் இருப்பதை உறுதி செய்திட வேண்டும், மருத்துவர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் தயார் நிலையில் இருந்திட வேண்டும். தேவையான அளவிற்கு மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மேலும், மக்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு சிறப்பாக பணிகளை மேற்கொள்ள வேண்டும். மழைக்காலத்திற்கான சிறப்பு ஏற்பாடாக பருவ மழை தொடர்பாக பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் மற்றும் சேவைகளுக்காக 1913 என்கிற எண்ணிற்கு ஒரே நேரத்தில் 150 அழைப்புகளுக்கான இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதை மக்கள் பயன்பெறும் வகையில் குறைகளை உரிய அலுவலர்களுக்கு தெரிவித்து உடனுக்குடன் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். மூன்று வட்டார அலுவலகங்களிலும் ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம் அமைத்திடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்களுக்கான குறைகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கு நல் வாய்ப்பாக அமையும் வடகிழக்குப் பருவமழை
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அலுவலர்கள் சிறப்பாகப் பணியாற்றி விரைந்து முடித்திட வேண்டும் என்று பேசினார்.
இக்கூட்டத்தில், துணை மேயர் மு.மகேஷ்குமார், ஆணையாளர் ஜெ.குமரகுருபரன், துணை ஆணையாளர் (பணிகள்) வி.சிவகிருஷ்ணமூர்த்தி, மத்திய வட்டார துணை ஆணையர் எச். ஆர். கௌஷிக், தலைமைப் பொறியாளர் (பொது) எஸ்.ராஜேஸ்வரி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.