பரபரப்பாகும் அரசியல் களம்: நிர்மலா சீதாராமனை சந்தித்த செங்கோட்டையன், சீமான்

மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை, அதிமுக மூத்த நிர்வாகி செங்கோட்டையன் சந்தித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரபரப்பாகும் அரசியல் களம்: நிர்மலா சீதாராமனை சந்தித்த செங்கோட்டையன், சீமான்
Published on

சென்னை,

எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்தே செல்வாக்கு மிக்க தலைவராக திகழும் செங்கோட்டையனுக்கும், எடப்பாடி பழனிசாமிக்கும் இருந்து வந்த பனிப்போர் அத்திக்கடவு-அவினாசி திட்ட நிறைவு பாராட்டுவிழாவின்போது வெடித்தது. அந்நிகழ்வைப் புறக்கணித்த செங்கோட்டையன், எடப்பாடி பழனிசாமியை தவிர்த்து வந்தார். கட்சியில் இது சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. சட்டமன்ற நிகழ்வுகளில் கூட எடப்பாடி பழனிசாமியை அவர் சந்திக்காமல் தவிர்த்து வந்தார்.

இந்தச் சூழலில், பா.ஜ.க.வுடன் கூட்டணியே கிடையாது எனக் கூறி வந்த எடப்பாடி பழனிசாமி திடீரென மத்திய மந்திரி அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தார். அன்று இரவே, 2026ம் ஆண்டு தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என மத்திய மந்திரி அமித்ஷா எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், சென்னை வந்த எடப்பாடி பழனிசாமி, "தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமையும் என அமித் ஷா, பதிவிட்டிருந்தால் அது அவரது விருப்பம், தேர்தல் நெருங்கும் நேரத்தில் தான் கூட்டணி பற்றி அறிவிக்க முடியும்" என்று தெரிவித்திருந்தார்.

இதனைத்தொடர்ந்து அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ரகசியமாக டெல்லி வந்து மத்திய மந்திரிகள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து சென்றுள்ளார். இதனை டெல்லி பா.ஜனதாவின் தமிழக பிரிவு நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.

இந்த நிலையில், சென்னை வந்துள்ள மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை செங்கோட்டையன் சந்தித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானும், நிர்மலா சீதாராமனை சந்தித்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுமட்டுமின்றி தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகனும், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமனை நேற்று இரவு சந்தித்து பேசி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதிமுக-பாஜக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது மத்திய மந்திரியுடனான சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இதேபோல் , அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமியும், மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com