

சென்னை,
தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டலின் இன்று தனது 72-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல் அமைச்சர்கள் அண்ணாதுரை மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மு.க. ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
பிறந்த நாளை முன்னிட்டு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு இருக்கும் பதிவில் கூறியிருப்பதாவது:- முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் நீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் பெற வாழ்த்துகிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.
கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள வாழ்த்து கடிதத்தில் கூறியிருப்பதாவது."தாங்கள் இன்று தங்களுடைய 72-வது பிறந்தநாளைக் கொண்டாடுவதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தங்களுடைய தலைமையின்கீழ் தமிழ்நாட்டு மக்கள் எல்லா நலன்களையும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ வாழ்த்துகிறேன்.
மேலும் எல்லாம் வல்ல இறைவன் அருளால் தாங்கள் பூரண உடல் ஆரோக்கியத்துடனும், சந்தோஷத்துடனும், தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை ஆற்றிடவும் இந்நன்நாளில் தங்களை வாழ்த்துகிறேன்" என்று கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் கவர்னர் ஆர்.என். ரவி அந்த வாழ்த்து கடிதத்தில் தமிழில் கையொப்பமிட்டுள்ளார்.