இரண்டாவது மாநில மாநாடு - தேதியை உறுதி செய்த தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்

நிர்ணயித்த தேதிக்கு முன்பாகவே மாநாடு நடக்க இருப்பதால், மாநாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை கிராமத்தில் கடந்த ஆண்டு நடந்தது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் வருகிற 25-ந் தேதி நடத்த ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இதையொட்டி மதுரை-தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை எலியார்பத்தி சுங்கச்சாவடி பகுதி அருகே உள்ள பாரபத்தி பகுதியில் மாநாட்டிற்கான பூமி பூஜை நடந்தது. தொடர்ந்து கட்சி நிர்வாகிகள், மாநாட்டிற்கு அனுமதி பெறுவதற்காக மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து போலீஸ் சூப்பிரண்டு அர்விந்தை சந்தித்து மனு அளித்தனர். மேலும், மாநாட்டிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி இருந்தார்.

இதனையடுத்து போலீஸ் தரப்பில், மாநாடு நடைபெறும் 25-ந்தேதியை தொடர்ந்து 27-ந்தேதி விநாயகர் சதுர்த்தி வர இருப்பதாகவும், அதற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டியதிருப்பதால், மாநாடு நடைபெறும் தேதியை மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதற்கு புஸ்சி ஆனந்த் தரப்பில், கட்சி தலைமையிடம் கேட்டு முடிவு செய்கிறோம் என கூறிவிட்டு சென்றனர். இதனால், தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு குறிப்பிட்ட அந்த தேதியில் நடைபெறுமா? அல்லது தேதி மாற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.

இந்த நிலையில், வருகிற 21-ம் தேதி மதுரையில் தவெக 2-வது மாநில மாநாடு நடைபெறும் என்று அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கழகத் தோழர்களுக்கு வணக்கம்.

மாற்றத்தை நோக்கிய தமிழக மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில், தமிழக வெற்றிக் கழகம் மக்களின் ஏகோபித்த ஆதரவோடு வீறுகொண்டு வெற்றிநடை போட்டு வருவதை அனைவரும் அறிவீர்கள். இந்தப் பயணத்தின் அடுத்த கட்டமாகக் கழகத்தின் மாநில மாநாடு, ஆகஸ்டு 25ஆம் தேதி (25.08.2025) மதுரையில் நடைபெறும் என்று ஏற்கெனவே அறிவித்திருந்தேன்.

ஆனால், மாநாடு முடிந்த ஒருநாள் இடைவெளியில் விநாயகர் சதுர்த்தி விழா வருவதால். காவல் துறை அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்வதோடு அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட வேண்டியிருக்கிறது என்றும். எனவே மாநாட்டிற்கு முழுமையான பாதுகாப்பு வழங்குவதற்கு ஏதுவாக 18.08.2025 முதல் 22.08.2025 வரை ஏதேனும் ஒரு தேதியில் மாநாட்டை நடத்தும்படியும் காவல் துறை கேட்டுக்கொண்டது. அதன்பேரில், கழகத்தின் மாநில மாநாடு முன்கூட்டியே நடத்தப்பட உள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு, ஆகஸ்டு 21ஆம் தேதி (21.08.2025) வியாழக்கிழமை அன்று. மாலை 4.00 மணி அளவில் ஏற்கெனவே அறிவித்த அதே மதுரை மாநகரில் அதே பிரம்மாண்டத்தோடும் கூடுதல் உற்சாகத்தோடும் நடைபெற உள்ளது என்பதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இதற்கான பணிகள், ஏற்கெனவே சிறப்பான முறையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அந்தப் பணிகள் தற்போது மேலும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. எனவே கழகத் தோழர்கள் வரும் 21ஆம் தேதி மதுரையில் நடைபெற உள்ள கழகத்தின் மாநில மாநாட்டிற்கு மிகவும் பொறுப்புடனும் பாதுகாப்புடனும் வந்து கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்ணயித்த தேதிக்கு முன்பாகவே மாநாடு நடக்க இருப்பதால், மாநாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், கட்சி நிர்வாகிகள் சமூக வலைதளங்களில் மாநாட்டுக்கான தேதி அறிவிப்பை பகிர்ந்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com