ஆவின் நிறுவனத்திற்கு பால் விநியோகிக்கும் விவசாயிகளுக்கு காலத்தே ஊக்கத்தொகை - ஜி.கே. வாசன் வலியுறுத்தல்

தமிழக அரசு, பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் நலன் காக்கும் வகையில் செயல்பட வேண்டும் என ஜி.கே.வாசன் வலியுறுத்தி உள்ளார்.
கோப்புப்படம் 
கோப்புப்படம் 
Published on

சென்னை,

த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

தமிழக அரசு, பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள் நலன் காக்கும் வகையில் செயல்பட வேண்டும். ஆவின் நிறுவனத்தை லாபத்தில் இயக்க வேண்டும், ஆவினுக்கு பால் விநியோகிக்கும் விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டால் தான் தமிழக மக்கள் பயன் பெறுவார்கள்.

தமிழ்நாட்டில் 20 லட்சம் பேர் ஆவின் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக இருக்கின்ற வேளையில் சுமார் 8 லட்சம் விவசாயிகள் ஆவின் நிறுவனத்திற்கு பால் விநியோகிக்கிறார்கள். இந்நிலையில் பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

அதாவது தினமும் 2 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 35 லட்சம் லிட்டர் பாலை ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கிறது. ஆவின் நிறுவனம் சிறு குறு விவசாயிகளுக்கு பேருதவியாக செயல்பட வேண்டும். அந்த வகையில் ஆவின் நிறுவனம் பால் விநியோகிக்கும் விவசாயிகளின் நலனைக் காக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட லிட்டருக்கு ரூ. 3 என்ற ஊக்கத்தொகையை காலத்தே வழங்க வேண்டும்.

அப்படி வழங்காமல் ஊக்கத்தொகையை இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை என தாமதமாக வழங்குவதால் பால் விநியோகிக்கும் விவசாயிகள் பாதிக்கப்படுவதோடு பால் கூட்டுறவு சங்கங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இச்சூழலில் விவசாயிகள் அவர்களுக்கான தினசரி ஊக்கத்தொகை வரவு குறித்து பால் கூட்டுறவு சங்கத்தில் முறையிட்டால் வீண் பிரச்னை எழுகிறது. இதற்கு காரணம் கடந்த 4 மாதங்களாக லிட்டருக்கு மூன்று ரூபாய் என்ற ஊக்கத்தொகையை இன்னும் வழங்காமல் இருப்பதே.

தமிழ்நாடு அரசு, பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகையை நான்கு மாதமாக வழங்காமல் நிறுத்தி வைத்திருப்பதால் சாதாரண விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே இதே போல 4 மாதமாக ஊக்கத்தொகையை காலத்தே வழங்காமல் அலைய வைத்த பின்பு வழங்கியதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இப்போது ஆவின் நிறுவனத்திற்கு பால் விநியோகிக்கும், பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கான ஊக்கத்தொகையை உடனடியாக கொடுக்காத பட்சத்தில் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபடப்போவதாக தெரிவித்துள்ளனர்.

எனவே தமிழக அரசு, ஆவின் நிறுவன வளர்ச்சியை கவனத்தில் கொண்டு பால் விநியோகிக்கும், பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவையில் உள்ள 120 கோடி ரூபாய்க்கும் மேற்பட்ட ஊக்கத்தொகையை உடனடியாக வழங்கி, சுமார் 8 லட்சம் விவசாயிகளின் நலனைக் காக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ்(மூ) சார்பில் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com