வேலூர்: கனமழை எச்சரிக்கை; பள்ளி மாணவர்களை முன்கூட்டியே வீட்டுக்கு அனுப்ப உத்தரவு

வேலூரில் இன்று மாலை 3 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என மாவட்ட கலெக்டர் அறிவித்து உள்ளார்.
வேலூர்: கனமழை எச்சரிக்கை; பள்ளி மாணவர்களை முன்கூட்டியே வீட்டுக்கு அனுப்ப உத்தரவு
Published on

வேலூர்,

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக நீடிக்கிறது. தொடர்ந்து மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று பிற்பகலில் தென் மேற்கு மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் வட தமிழக, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு அப்பால் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

அதற்கடுத்து மேலும் மேற்கு-வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து, நாளை வட தமிழகம், புதுச்சேரி, தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளுக்கு வந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைய வாய்ப்பு உள்ளது. இப்போது வரை தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை நெருங்கும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது என்றும், இன்று அது புயலாக மாறுமா? என்பது குறித்த தகவல் வெளியாகும் என்றும் வானிலை ஆய்வு மைய தென் மண்டலத்தலைவர் அமுதா கூறினார்.

கனமழை முன்னெச்சரிக்கை காரணமாக சென்னை மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். அதே போல சேலம், புதுக்கோட்டை, பெரம்பலூர், நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அளித்து கலெக்டர் சினேகா உத்தரவிட்டுள்ளார். மேலும், திருச்சி, காஞ்சிபுரம், புதுக்கோட்டை, திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, சிவகங்கை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேலூரில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு பள்ளி மாணவர்களை முன்கூட்டியே வீட்டுக்கு அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, இன்று மாலை 3 மணி வரை மட்டுமே பள்ளிகள் செயல்படும் என மாவட்ட கலெக்டர் அறிவித்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com