

நெல்லை,
நெல்லை மாவட்டம் களக்காடு சிதம்பரபுரம் முத்துநகர் காலனியைச் சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருடைய மகன் சிவக்குமார் (வயது 29). கட்டிட தொழிலாளி. இவரும், இளம்பெண் ஒருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்தனர்.
பின்னர் அவர்கள் பிரிந்து விட்டனர். இதற்கு அந்த பெண்ணின் தம்பியின் நண்பர்தான் காரணம் என்று கருதிய சிவக்குமார், அவரை செல்போனில் தொடர்பு கொண்டு மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் கோவில் கொடை விழாவிலும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது.
சம்பவத்தன்று சிவக்குமார் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பெண்ணின் தந்தை, சிவக்குமாரிடம் எதற்காக அடிக்கடி தகராறு செய்கிறாய்? என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் மறைத்து வைத்திருந்த கத்தியால் சிவக்குமாரின் மார்பில் குத்தியதாக கூறப்படுகிறது.
இதில் பலத்த காயமடைந்த அவரை சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்த புகாரின்பேரில், களக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான அந்த பெண்ணின் தந்தையான சந்திரனை(53) வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.