10 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு

வங்கக்கடலில் வரும் 24ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
10 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு
Published on

சென்னை,

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, இன்று காலை 8.30 மணி அளவில் லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில், மேற்கு- வட மேற்கு திசையில் மெதுவாக நகரக்கூடும்.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. வருகின்ற 22-ஆம் தேதி வாக்கில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, அதற்கடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறக்கூடும். இதன் காரணமாக தமிழகத்தில் இன்று ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நள்ளிரவு 1 மணி வரை 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி, கோவை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதனிடையே வங்கக்கடலில் வரும் 24ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாகவும், இது அடுத்த 48 மணி நேரத்தில் தென்மேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக் கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்திருந்தது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com