10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது
10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்
Published on

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,

மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த பகுதி இன்று மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக அடுத்த 24 மணிநேரத்தில் வலுப்பெறக்கூடும். இது மேலும் அதே திசையில் நகர்ந்து அதற்கடுத்த 48 மணிநேரத்தில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும்.

குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்றும் அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக நாளை குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை - தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். அதன் பின் இது மேலும் வலுப்பெறக்கூடும். தென்கிழக்கு அரப்பிக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி இன்றும் அதே பகுதிகளில் நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் இன்று அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கடலோர தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பலத்த தரை காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கன்னியாகுமரி , தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, சிவகங்கை ஆகிய 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கும்

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com