இலங்கையை புரட்டி போட்ட டிட்வா புயல்: 153 பேர் பலி; 200 பேர் மாயம்

நாட்டின் 3-ல் ஒரு பங்கு மக்கள் மின்சார இணைப்பு மற்றும் குடிநீர் விநியோகம் இன்றி தவித்து வருகின்றனர்.
இலங்கையை புரட்டி போட்ட டிட்வா புயல்: 153 பேர் பலி; 200 பேர் மாயம்
Published on

கொழும்பு,

இலங்கையில் இதுவரை இல்லாத வகையில், பருவநிலை மாற்றத்தின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. நவம்பர் மாதம் 17-ந்தேதி முதல் மழை தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால், வரலாறு காணாத பாதிப்புகளை மக்கள் சந்தித்து வருகின்றனர்.

கனமழையால், நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த கனமழை எதிரொலியாக, பல்வேறு பகுதிகளிலும் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. இலங்கையில் கனமழையில் சிக்கி இதுவரை 153 பேர் பலியாகி உள்ளனர். 200 பேரை காணவில்லை. பலர் காயமடைந்து உள்ளனர் என இலங்கை பேரிடர் மேலாண் மையம் தெரிவிக்கின்றது.

புயல் பாதிப்பு மற்றும் மழை, நிலச்சரிவு, வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டு உள்ள இலங்கைவாசிகளுக்கு உதவிடும் வகையில், அண்டை நாடான இந்தியா முன்வந்துள்ளது. இலங்கையில் பேரிடரை முன்னிட்டு, இந்தியா சார்பில் ஆபரேசன் சாகர்பந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதன்படி, மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண உதவியை இந்தியா வழங்குகிறது. ஐ.என்.எஸ். விக்ராந்த் மற்றும் ஐ.என்.எஸ். உதயகிரி ஆகிய கப்பல்கள் மூலம் கொழும்பு நகரில் நிவாரண உதவி பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதனை தொடர்ந்து, இந்திய விமான படையின் சி-130 ஜே விமானத்தில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்பட்டன. அதில், கூடாரங்கள், தார்ப்பாய்கள், போர்வைகள், சுகாதார நலன் சார்ந்த பொருட்கள் மற்றும் உடனடியாக சாப்பிட கூடிய உணவு பொருட்கள் உள்ளிட்ட 12 டன் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன. எனினும், புயல் பாதிப்புகளால் அந்நாட்டின் 3-ல் ஒரு பங்கு மக்கள் மின்சார இணைப்பு மற்றும் குடிநீர் விநியோகம் இன்றி தவித்து வருகின்றனர்.

இதேபோன்று, கனமழை தொடர்ச்சியாக 20 ஆயிரம் வீடுகள் சேதமடைந்து விட்டன. 1.08 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 2.19 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com