சீனாவை தவிர பிற நாடுகளுக்கான வரி விதிப்பு தற்காலிகமாக நிறுத்தம்- டிரம்ப் திடீர் முடிவு

சீனாவை தவிர மற்ற நாடுகள் மீது விதிக்கப்பட்ட கூடுதல் வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.
சீனாவை தவிர பிற நாடுகளுக்கான வரி விதிப்பு தற்காலிகமாக நிறுத்தம்- டிரம்ப் திடீர் முடிவு
Published on

வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். அமெரிக்க பொருட்களுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு அதே விகிதத்தில் பரஸ்பரமாக வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, கடந்த 2-ந்தேதி எந்தெந்த நாடுகளுக்கு எத்தனை சதவீதம் வரி என்று டிரம்ப் அறிவித்தார். இந்த வரிவிதிப்பு 9-ந்தேதி (நேற்று) அமலுக்கு வரும் என்று அறிவித்தார்.

இந்திய பொருட்களுக்கு 26 சதவீத வரி விதித்தார். சீன பொருட்களுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட 20 சதவீத வரியுடன் கூடுதலாக 34 சதவீத வரி விதித்தார். அதற்கு சீனா பதிலடியாக, அமெரிக்க பொருட்களுக்கு 34 சதவீத வரி விதித்தது. அந்த வரியை 8-ந்தேதிக்குள் ரத்து செய்யாவிட்டால், சீன பொருட்கள் மீது மேலும் 50 சதவீத வரி விதிக்கப்படும் என்று டிரம்ப் மிரட்டல் விடுத்தார். ஆனால், சீனா ரத்து செய்யவில்லை. இதனால் சீன பொருட்கள் மீது கூடுதலாக 50 சதவீத வரி விதிக்கப்பட்டது.

இத்துடன், சீன பொருட்கள் மீதான மொத்த வரி 104 சதவீதமாக உயர்ந்தது. அமெரிக்காவுக்கு பதிலடியாக, அமெரிக்க பொருட்கள் மீது சீனா மேலும் 50 சதவீத வரி விதித்தது. இதனால், அமெரிக்க பொருட்கள் மீதான சீனாவின் வரிவிதிப்பு 84 சதவீதமாக உயர்ந்தது. இது, இன்று (வியாழக்கிழமை) அமலுக்கு வந்தது. அமெரிக்காவின் வரி விதிப்பு நடவடிக்கை காரணமாக சர்வதேச அளவில் பொருளாதார நிலையற்ற தன்மை ஏற்படும் என்ற அச்சம் எழுந்த நிலையில், திடீரென வரி விதிப்பை நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாகவும் சீனாவுக்கு மட்டும் விதி விலக்கு கிடையாது எனவும் டிரம்ப் அறிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com