ஈரான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்: மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் பதற்றம்

ஈரான் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இஸ்ரேலில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

தெஹ்ரான்,

மத்திய கிழக்கில் கடந்த சில ஆண்டுகளாக இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போர் தொடர்ந்து வருகிறது. ஹமாசின் முக்கிய தளபதிகள் அனைவரும் கொல்லப்பட்டுள்ள நிலையில், இந்த மோதல் தற்போது முடிவுக்கு வரும் சூழல் நிலவுகிறது.

இதற்கிடையே மத்திய கிழக்கில் மற்றும் மேலும் அழிவுகரமான ராணுவ மோதல் ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் ஈரானின் அணுசக்தி திட்டத்தைக் கட்டுப்படுத்தும் ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

இதற்கிடையே ஈரான் மீது, குறிப்பாக ஈரானில் அணு ஆயுதங்கள் உள்ள இடங்களில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்று அமெரிக்க உளவுத்துறை சந்தேகம் தெரிவித்து வந்தது. ஈரானிடம் அணு ஆயுதங்கள் இருந்தால் அது ஆபத்தாக மாறும் என டிரம்ப் நினைக்கிறார். இதன் காரணமாகவே ஈரான் உடன் டிரம்ப் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.

அந்த பேச்சுவார்த்தையில் இறுதி முடிவு எட்டப்படவில்லை என்றால் அமெரிக்காவின் ஒப்புதல் இல்லாமலேயே ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தக்கூடும் என்று வாஷிங்டன் போஸ்ட் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டிருந்தது.

இந்த சூழலில் அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தை திட்டமிட்டபடி செல்லவில்லை. இது டிரம்ப் நிர்வாகத்திற்குக் கவலையளிப்பதாக இருந்தது. ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்க அமெரிக்கா அனுமதிக்காது என்பதில் டிரம்ப் திட்டவட்டமாக இருக்கிறார். இதனால் பேச்சுவார்த்தை சுமுகமாகப் போகவில்லை என்றால் மீண்டும் ஒரு மோதல் நடக்கும் என்று அஞ்சப்படுகிறது.

அமெரிக்காவுக்கும், ஈரான் நாட்டிற்கும் இடையே நடந்து வரும் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், இஸ்ரேல் உடனடியாக ஈரான் மீது தாக்குதல் நடத்த தயாராகி வருவதாகக் கடந்த மாதம் தகவல் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் ஈரானின் இதயமாக கருதப்படும் அணுசக்தி திட்டங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஈரானின் தெஹ்ரானில் மக்கள் குண்டுவெடிப்பு சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சியில் மூழ்கி உள்ளனர். அந்நாட்டு அரசு தொலைக்காட்சி குண்டுவெடிப்பை உறுதி செய்துள்ளது. என்ன நடந்தது என்பது குறித்து உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

இந்த சூழலில் ஈரான் பதில் தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் இஸ்ரேலில் அவசர நிலை பிரகடனம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே ஈரானின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை உற்பத்தி செய்யும் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், ஈரான் மீதான தாக்குதல் தொடரும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மேலும் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "இஸ்ரேல் ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது, இது இஸ்ரேலின் உயிர்வாழ்விற்கான ஈரானிய அச்சுறுத்தலை முறியடிக்க இலக்கு வைக்கப்பட்ட ராணுவ நடவடிக்கையாகும். இந்த அச்சுறுத்தலை நீக்க இந்த நடவடிக்கை எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தொடரும்" என்று பெஞ்சமின் நெதன்யாகு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஈரான் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல் நடத்தி உள்ள சம்பவத்தால், மத்திய கிழக்கு நாடுகளில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு நாங்கள் காரணமில்லை என்றும், அமெரிக்காவை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தக்கூடாது என்றும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com