தினத்தந்தி
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இந்த தேங்காய் லட்டை எளிமையாகத் தயாரிக்கலாம். விருந்தினர்கள் திடீரென வந்தாலும், குறைந்த நேரத்தில் இந்த இனிப்பை செய்து கொடுத்து அசத்தலாம்.
தேவையான பொருட்கள்; துருவிய தேங்காய் - 1 கப், சர்க்கரை - 1 கப், நெய் - 2 தேக்கரண்டி, முந்திரி - தேவையான அளவு, திராட்சை - தேவையான அளவு, ஏலக்காய் - 3 (பொடித்தது).
செய்முறை; ஒரு பாத்திரத்தில் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி, திராட்சை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பின்னர் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கிளறவும்.
சர்க்கரை உருகியதும் துருவிய தேங்காயை சேர்த்து தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்கவும். பின்னர் பொடித்த ஏலக்காயை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
சுமார் 7 நிமிடங்களுக்குப் பிறகு கலவையை ஒரு தட்டில் எடுத்து சிறிது நேரம் ஆறவிடவும். கையில் தாங்கும் சூட்டில் இருக்கும்போது தேவையான அளவு எடுத்து உருண்டைகளாகப் பிடித்தால் சுவையான தேங்காய் லட்டு தயார்.
எளிய முறையில், குறைந்த நேரத்தில் இந்த தேங்காய் லட்டை வீட்டிலேயே செய்து பரிமாறலாம்.