14, 18, 22, 24 காரட் தங்கம்: என்ன வித்தியாசம்? எதை வாங்குவது சிறந்தது?

தினத்தந்தி

14 காரட் தங்கம்: சுமார் 58.5 சதவீதம் தூய தங்கம் கலந்திருக்கும். 41.5 சதவீதம் பிற உலோகங்கள் (செம்பு, வெள்ளி, துத்தநாகம் போன்றவை) கலந்திருக்கும். தங்கத்துடன் பிற உலோகங்களும் கலப்பதால் இந்த வகை தங்கம் பொதுவாக அதிக வலிமை கொண்டதாக இருக்கும்.

சிறப்புகள் மற்றும் குறைபாடுகள்: எளிதில் கீறல் ஏற்படாது, விலை குறைவாக இருக்கும், நீண்ட நாட்கள் பயன்படுத்தலாம். 14 காரட் தங்கத்தில் பிற உலோகங்கள் அதிகம் கலக்கப்படுவதால் தங்கத்தில் மஞ்சள் நிறம் சற்று குறைவாக இருக்கும்.

18 காரட் தங்கம்; 75 சதவீதம் தூய தங்கமும், 25 சதவீதம் பிற உலோகங்களும் இடம் பெற்றிருக்கும். இந்த தங்கம் தூய்மைக்கும், வலிமைக்கும் இடையே நல்ல சமநிலையை வழங்குகிறது.

சிறப்புகள் மற்றும் குறைபாடுகள்: அழகான மஞ்சள் நிறத்துடன் ஓரளவு பிரகாசமாக காட்சியளிக்கும், தினசரி பயன்பாட்டிற்கும் ஏற்றது. மேலும் 14 காரட் தங்கத்தை விட பிற உலோகங்கள் குறைவாக சேர்க்கப்படுவதால் இந்த தங்கம் சற்று மென்மையாக காணப்படும்.

22 காரட் தங்கம்; இந்த தங்கத்துக்கு மற்ற வகை தங்கங்களை விட மவுசு அதிகம். இதில் 91.6 சதவீதம் தூய தங்கம் இடம் பெற்றிருக்கும். 8.4 சதவீதம் பிற உலோகங்கள் கலந்திருக்கும். திருமண நகைக ளுக்கு 22 காரட் தங்கம்தான் அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

சிறப்புகள் மற்றும் குறைபாடுகள்: அதிக தூய்மை கொண்ட தங்கம் இது, பாரம்பரிய மஞ்சள் நிற பளபளப்புடன் காட்சியளிக்கும், மறு விற்பனை மதிப்பு அதிகமாக இருக்கும். மேலும் குறைந்த அளவிலேயே பிற உலோகங்கள் சேர்க்கப்படுவதால் 14 காரட் மற்றும் 18 காரட் தங்கத்தை விட மென்மையானது.

24 காரட் தங்கம்; தங்கத்தை பொறுத்தவரை இதுவே மிகவும் தூய்மையானது. இதில் சுமார் 99.9 சதவீதம் தூய தங்கம் இருக்கும். அதாவது இதில் வேறு எந்த உலோகமும் கலந்திருக்காது. இந்த தங்கம் மிகவும் மென்மையானது.

சிறப்புகள் மற்றும் குறைபாடுகள்: அதிகபட்ச தூய்மை கொண்டிருக்கும், தங்கக் கட்டிகள், தங்க நாணயங்கள் மற்றும் முதலீட்டிற்கு ஏற்புடையது. மேலும் மென்மையானது என்பதால் எளிதில் வளைந்து விடும். கீறல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பு அதிகம்.

எதை வாங்குவது சிறந்தது? தினசரி பயன்படுத்தும் நகைகளாக இருந்தால் 14 காரட் அல் லது 18 காரட் தங்கத்தை தேர்ந்தெடுக்கலாம். திருமணம் மற்றும் பாரம்பரிய நகைகளுக்கு 22 காரட் தங்கம் வாங்கலாம். முதலீட்டிற்கு 24 காரட் தங் கம் பொதுவாக சிறந்த தேர்வாக கருதப்படுகிறது.

வறண்ட சருமம் நீங்கி பளபளக்க உதவும் பாதாம் பிசின் பேஸ் பேக்!