தினத்தந்தி
உடற்பயிற்சியுடன் யோகாசனங்களையும் தினசரி வாழ்க்கையில் சேர்த்துக்கொண்டால், வயிற்றுப் பகுதியில் தேங்கியுள்ள கொழுப்பை குறைக்க உதவும். குறிப்பாக சில யோகாசனங்கள் தொப்பையை குறைப்பதில் சிறந்த பலன்களை அளிக்கின்றன.
புஜங்காசனம்: வயிற்றுத் தசைகளை வலுப்படுத்தி, வயிற்றில் தேங்கியுள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. மேலும் முதுகு, அடிவயிறு மற்றும் உடலின் மேற்பகுதியை வலிமையாக்குகிறது. குப்புற படுத்து, உள்ளங்கைகளை மார்பின் அருகில் தரையில் ஊன்றி, மூச்சை உள்ளிழுத்தபடி உடலை மேலே தூக்கி 15 முதல் 30 நொடிகள் நிலைத்திருக்க வேண்டும்.
தனுராசனம்: உடலை வில் போன்ற வடிவத்தில் வளைத்து செய்யப்படும் ஆசனமாகும். இது வயிறு மற்றும் தொடைப் பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைப்பதோடு, செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.
நாகாசனம்: இடுப்பைச் சுற்றியுள்ள கொழுப்புகளைக் கரைத்து தட்டையான வயிற்றைப் பெற உதவுகிறது. இந்த ஆசனம் முதுகு மற்றும் கால்தசைகளையும் வலுப்படுத்துகிறது. குப்புற படுத்து, மேல் உடலையும் கால்களையும் உயர்த்தி சில நொடிகள் நிலைத்திருக்க வேண்டும்.
பவனமுக்தாசனம்: குடலுக்கு மசாஜ் செய்ததுபோன்ற பலனை அளிக்கிறது. இது செரிமானத்தை சீராக்கி, மலச்சிக்கலைத் தடுத்து, வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது. மேலும் அடிவயிறு, தொடை மற்றும் இடுப்புப் பகுதியில் உள்ள கொழுப்பைக் குறைக்கவும் உதவுகிறது.
யோகாசனங்களை வெறும் தொப்பை குறைப்பதற்காக மட்டுமல்லாமல், உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் செய்யலாம். தொடர்ந்து யோகா செய்வதால் மனஅழுத்தம் குறைந்து, உடலில் புத்துணர்ச்சி அதிகரிக்கும். இதனால் உடல் எடையைக் கட்டுப்படுத்துவதும் எளிதாகிறது.
தொப்பை குறைய வேண்டும் என்றால் யோகாசனங்களுடன் ஆரோக்கியமான உணவுப் பழக்கமும் அவசியம். அதிக எண்ணெய், சர்க்கரை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்த்து, காய்கறிகள், பழங்கள் மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும் தினமும் குறைந்தது 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. போதுமான அளவு தண்ணீர் குடிப்பதும், சீரான தூக்கத்தைப் பின்பற்றுவதும் வயிற்றுக் கொழுப்பை குறைக்க உதவும்.
இந்த யோகாசனங்களை தினமும் முறையாக செய்து வந்தால், தொப்பை குறைவதோடு உடல் நலனும் மேம்படும். இருப்பினும், சிறந்த பலனுக்கு சீரான உணவுமுறை மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையையும் பின்பற்றுவது அவசியம்.