தினத்தந்தி
தேங்காய் மூடியை உடனே பயன்படுத்த முடியாவிட்டால், அதை தண்ணீரில் முழ்க வைத்து ஃபிரிட்ஜில் வைத்தால் பல நாட்கள் கெடாமல் இருக்கும். தேவையான நேரத்தில் எடுத்துப் பயன்படுத்தலாம்.
கறிவேப்பிலை, மல்லித்தழை, புதினா போன்ற கீரைகளை வாழை இலையில் சுற்றி வைத்தால் அவை விரைவில் வாடாமல், நீண்ட நேரம் பசுமையாக இருக்கும்.
பயிறு வகைகளை நீண்ட நாட்கள் சேமிக்கும்போது புழு, பூச்சி வராமல் இருக்க, சிறிதளவு விளக்கெண்ணெய் சேர்த்து நன்றாகக் கிளறி வைத்து சேமிக்கலாம்.
தேங்காய் சட்னி, தக்காளி சட்னி அல்லது வேறு எந்த சட்னி செய்தாலும், ஒரு அல்லது இரண்டு பூண்டு பற்களை சேர்த்து அரைத்தால் சுவையும் மணமும் மேலும் அதிகரிக்கும்.
ரசத்தின் சுவையை இன்னும் சிறப்பாக்க வேண்டுமா? சிறிதளவு இளநீர் (தேங்காய் தண்ணீர்) சேர்த்து கொதிக்கவிட்டால் ரசத்திற்கு மென்மையான இனிப்பு சுவையும் தனித்துவமான மணமும் கிடைக்கும்.
தோசை சுடும்போது நல்ல மணம் வீச வேண்டுமெனில், தோசை ஊற்றும் முன் தோசைக்கல்லில் சிறிதளவு நல்லெண்ணெய் தடவி சூடாக்குங்கள். தோசையும் சுவையாகவும் பொன்னிறமாகவும் வரும்.
நெய் நீண்ட நாட்கள் மணமாக இருக்க வேண்டுமா? நெய் வைத்திருக்கும் ஜாடியில் ஒரு சிறிய வெல்லத் துண்டை போட்டு வைத்தால் அதன் நறுமணம் நீண்ட நேரம் கமகமக்கும்.
முறுக்கு, சீடை போன்ற பலகாரங்களுக்கு மாவை வெந்நீரில் பிசைந்து செய்தால் பொரித்த பிறகு அதிக மொறுமொறுப்புடன் சுவையாக இருக்கும். மேலும், இட்லி மாவில் ஒரு கரண்டி நெய் சேர்த்தால் இட்லி மென்மையாக, மல்லிகைப்பூ போல பஞ்சுபோல் வரும்.
வாடிவிட்ட கொத்தமல்லித் தழையை தூக்கி எறிய வேண்டாம். அதை சில நிமிடங்கள் வெதுவெதுப்பான நீரில் போட்டு எடுத்தால் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று, புதிதாக வாங்கியது போல பசுமையாக மாறும். இப்படி சிறிய சமையல் டிப்ஸ்களைப் பின்பற்றினால், உங்கள் சமையலும் சேமிப்பும் இன்னும் எளிதாகவும் சிறப்பாகவும் இருக்கும்.