தினத்தந்தி
வண்ணமயமான தெருக்கள் முதல் ஏரிக்கரை காட்சிகள் வரை, இந்தியாவுக்குள்தான் இருக்கிறோமா? வேறு உலகத்திற்குள் நுழைந்து விட்டோமா? என்ற உணர்வை ஏற்படுத்தும். அந்த அற்புதமான மலை நகரம் இந்தியாவின் குட்டி இத்தாலி என்று அழைக்கப்படுகிறது. மராட்டிய மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள அதன் பெயர், லவாசா.
இத்தாலியின் ரிவியராவில் உள்ள அழகிய நகரமான போர்டோபினோவின் தோற்றத்தை பிரதிபலிக்கும் வகையில் லவாசா வடிவமைக்கப்பட்டுள்ளது. வண்ணமயமான கட்டிடங்கள், ஏரிக்கரை நடைபாதைகள் மற்றும் கற்கள் பதிக்கப்பட்ட தெருக்கள் தனித்துவமான ஐரோப்பிய நகர உணர்வை அளிக்கின்றன.
ஏரிக்கரை நடைபாதைதான் லவாசாவின் இதயம். நிதானமாக நடப்பதற்கும், மிதிவண்டி ஓட்டுவதற்கும், ஓய்வாக அமர்ந்திருப்பதற்கும் ஏற்ற ரம்மியமான சூழலை கொண்டது. அதனால் சமூகவலைத்தளங்களில் அதிகம் பகிரப்படும் மலை நகரங்களுள் ஒன்றாக இருக்கிறது.
சவால்களை விரும்புவோருக்கு லவாசா சொர்க்க பூமியாக விளங்கும். அமைதி ததும்பும் ஏரியில் ஜெட் ஸ்கீயிங் மற்றும் கயாக்கிங் போன்ற நீர் விளையாட்டுகளில் ஈடுபடலாம்.
ஐரோப்பிய உணவுகள்; ஐரோப்பிய பாணியிலான உணவு வகைகளைப் பரிமாறும் கபேக்கள் மற்றும் உணவகங்கள் அங்கு உள்ளன. நறுமணமிக்க காபி முதல் உயர்தர உணவுகள் வரை, ஒவ்வொன்றிலும் இத்தாலியின் உணர்வும், ருசியும் கலந்திருக்கும்.
லவாசாவிற்கு செல்ல சிறந்த நேரம் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான காலகட்டமாகும். அப்போது வானிலை குளிர்ச்சியாகவும், இனிமையாக வும் இருக்கும். இந்த மாதங்களில் வெப்பம் அல்லது ஈரப்பதத்தின் அசவுகரியம் இல்லாமல் ஏரிக்கரையில் நடத்தல், சாகச விளையாட்டுகளில் ஈடுபடுதல் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்ளலாம்.
ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழைக்காலம், மூடுபனி படர்ந்த மலைகள் மற்றும் கொட்டும் நீர்வீழ்ச்சிகளுடன் லவாசாவை ஒரு பசு மையான சொர்க்கமாக மாற்றும். ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான கோடைகாலம் வெப்பத்தாக்கத்தில் இருந்து விடுபடுவதற்கு இதமான சூழலை கொண்டிருக்கும்.
மும்பையில் இருந்து 190 கி.மீ தொலைவிலும் , புனேவில் இருந்து சுமார் 57 கி.மீ தொலைவிலும் இந்த இந்தியாவின் குட்டி இத்தாலி என்று அழைக்கப்படும் 'லவாசா' அமைந்துள்ளது.