அனல் பறக்கும் கோடை! உடலை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்?

தினத்தந்தி

ஆரம்பமே அனல் பறக்கிறது. தொடக்கமே சுட்டெரிக்கும் நிலையில் உள்ளது. போகப்போக தமிழ்நாட்டில் பகல் நேரங்களில் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத அளவிற்கு வெயிலும், இரவு நேரங்களில் வீட்டுக்குள் இருக்கவே முடியாத அளவிற்கு புழுக்கமும் மக்களை வாட்டுகிறது.

வெயிலில் இருந்து தப்பிக்க சர்க்கரை அல்லது ஐஸ் சேர்க்காமல் அதிக அளவில் பழச்சாறு குடிப்பது நல்லது. நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்கள், கம்மங்கூழ், ராகிக்கூழ், கரும்புச்சாறு, இளநீர் போன்றவற்றை பருகுவது உடலுக்கு நன்மை தரும்.

மக்கள் அதிக நேரம் வெயிலில் சுற்றித் திரிவதை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் மாலை 3 மணி வரை கடும் வெயிலில் வெளியே செல்வதை தவிர்ப்பது சிறந்தது.

உடலில் நீரின் அளவு குறைவதைத் தவிர்க்க தினமும் 4 முதல் 5 லிட்டர் வரை சுத்தமான குடிநீரை அருந்த வேண்டும்.

கம்பில் அதிக நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் உள்ளதால், கம்பங்கூழ் குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும்.

நுங்கு உடலிலுள்ள சூட்டை தணிக்க உதவுகிறது. மேலும் அம்மை மற்றும் வைரஸ் காய்ச்சல் ஏற்படுவதையும் தடுக்க உதவலாம். நுங்கை தோலுடன் சாப்பிட்டால் வயிற்றுப் புண் குணமடைய உதவுகிறது. அதேபோல் நுங்கில் உள்ள தண்ணீரை வியர்க்குருவில் தடவினால் அது குறையவும் உதவலாம்.

வாரம் ஒருமுறை சிறிதளவு சீரகத்தை நல்லெண்ணெயில் பொறித்து, அது குளிர்ந்த பிறகு அந்த எண்ணெய்யை உச்சந்தலையில் வைத்து, உடலிலும் பூசி குளித்தால் உடல் சூடு குறையும்.

வீடுகளில் ப்ரிட்ஜில் வைத்த குளிர்ந்த நீரை குடிப்பதைவிட மண் பானையில் நீரை ஊற்றி வைத்து, அதில் குளிர்ந்த நீரை குடிப்பது உடலுக்கு நல்லது.

இவ்வாறான தற்காப்பு முறைகளை கடைப்பிடித்து இந்த கோடை வெயிலை அனைவரும் சமாளித்து, பாதுகாப்பாக வாழ்வதோடு இயற்கையையும் பாதுகாக்க உறுதி மேற்கொள்வோம்.

இடதுசாரி – வலதுசாரி என்றால் என்ன?