தினத்தந்தி
குழந்தைகளுக்கு பலூடா என்றால் மிகவும் பிடிக்கும். இன்று சப்ஜா பலூடாவை வீட்டிலேயே எளிய முறையில் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்: சப்ஜா விதை – ஒரு ஸ்பூன், பால் – ஒரு டம்ளர், சேமியா – சிறிதளவு, ஐஸ்கிரீம் – 2 ஸ்கூப், பாதாம், வால்நட், முந்திரி – சிறிதளவு, ப்ரவுன் சுகர் – தேவையான அளவு, ஸ்ட்ராபெர்ரி, மாதுளை, நாவல்பழம் – சிறிதளவு.
செய்முறை: சப்ஜா விதையை இரவே ஊற வைத்து கொள்ளவும். அது 3 அல்லது 4 ஸ்பூன் அளவிற்கு பெருகும்.
பின்னர் எல்லா பழங்களையும் தனித்தனியாக தண்ணீர் சேர்க்காமல் அரைத்து கொள்ளவும்.
சேமியாவை வேகவைத்து கொள்ளவும். பலூடா கிளாஸில் சப்ஜா விதை ஒரு ஸ்பூன் போட்டு, அதன் மேல் சிறிதளவு சேமியா சேர்க்கவும்.
அதன் மீது சிறிதளவு ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்து, மாதுளை ஜூஸ் ஊற்றி, அதன் மேல் ஐஸ்கிரீம் சேர்க்கவும்.
மீண்டும் சப்ஜா விதை ஒரு ஸ்பூன் போட்டு, அதன் மேல் சிறிதளவு சேமியா சேர்க்கவும். அதன் மீது ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்து, நாவல்பழம் ஜூஸ் ஊற்றி, மீண்டும் சப்ஜா விதை மற்றும் சேமியா சேர்க்கவும்.
அதன் மீது ட்ரை ஃப்ரூட்ஸ் சேர்த்து, ஸ்ட்ராபெர்ரி ஜூஸ் ஊற்றி, அதன் மேல் ஐஸ்கிரீம் சேர்க்கவும். இறுதியாக, சர்க்கரை கலந்து வைத்த பாலை மேலே ஊற்றி லேசாக கலக்கவும்.
பின்னர் ஃப்ரிட்ஜில் வைத்து குளிரவைத்து பரிமாறவும். சுவையான சப்ஜா பலூடா தயார்!