தினத்தந்தி
ஊறவைப்பது உணவுப் பொருட்களை மென்மையாக்கி, உடலுக்கு ஏற்றபடி மாற்றுகிறது. மேலும், உணவில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலால் நன்றாக உறிஞ்சப்பட உதவுகிறது. அப்படி அவசியம் ஊறவைத்து சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்கள் மற்றும் அதற்கான காரணங்களைப் பார்ப்போம்.
1. பாதாம், ஊறவைக்கும் நேரம்: 6 முதல் 8 மணி நேரம்: பாதாமில் நல்ல கொழுப்பு, புரதம், வைட்டமின் E மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளன. அதன் வெளிப்புற தோலில் உள்ள டானின் சத்துக்கள் உறிஞ்சப்படுவதற்கு தடையாக இருக்கும்.
பாதாமை இரவு முழுவதும் நீரில் ஊறவைத்து, காலையில் தோலை நீக்கி சாப்பிட்டால் டானின் குறைந்து, ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். ஜீரணமும் எளிதாகும்.
2. ராஜ்மா, ஊறவைக்கும் நேரம்: 8 முதல் 10 மணி நேரம்: ராஜ்மாவில் புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஊறவைக்காமல் சாப்பிட்டால் லெக்டின் என்ற சேர்மம் வயிற்றுப் பிரச்சினைகளை ஏற்படுத்தும். ஊறவைத்தால் நச்சுத்தன்மை குறைந்து, சமைப்பதற்கும் ஜீரணிப்பதற்கும் எளிதாகும்.
3. வெந்தயம்: ஊறவைக்கும் நேரம்: 6 முதல் 8 மணி நேரம்: வெந்தயம் செரிமானத்தை மேம்படுத்தி, வளர்சிதை மாற்றத்தை தூண்டும். ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவும். ஊறவைத்தால் கசப்புத்தன்மை குறைந்து, சத்துக்கள் எளிதாக கிடைக்கும்.
4. சப்ஜா விதைகள், ஊறவைக்கும் நேரம்: 10 முதல் 15 நிமிடங்கள்: சப்ஜா விதைகள் வெயில் காலத்தில் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஊறவைத்தால் ஜெல்லி போன்ற அமைப்பாக மாறி, சாப்பிட எளிதாகும். உலர்ந்த நிலையில் சாப்பிட்டால் ஜீரண சிரமம் ஏற்படும்.
5. சியா விதைகள், ஊறவைக்கும் நேரம்: 10 முதல் 20 நிமிடங்கள் : சியா விதைகள் நார்ச்சத்து, ஒமேகா-3 கொழுப்பு அமிலம் மற்றும் புரதம் நிறைந்தவை. ஊறவைத்தால் ஜெல்லி போன்ற அமைப்பாக மாறி, சத்துக்கள் உடலால் எளிதில் உறிஞ்சப்படும்.
6. சோயாபீன்ஸ், ஊறவைக்கும் நேரம்: 8 முதல் 12 மணி நேரம்: சோயா உணவுகள் புரதம் நிறைந்தவை. ஊறவைக்காமல் பயன்படுத்தினால் என்சைம் செயல்பாடு பாதிக்கப்பட்டு ஜீரண சிரமம் ஏற்படும். ஊறவைத்தால் தீங்கு விளைவிக்கும் தன்மைகள் குறைந்து, சமைப்பதற்கும் சாப்பிடுவதற்கும் ஏற்றதாக மாறும்.