Subash T
இந்தியச் சமையலறைகளில் பிரஷர் குக்கர் முக்கிய இடம் பிடித்துள்ளது. சாதம், பருப்பு, காய்கறிகள், இறைச்சி போன்ற உணவுகளை விரைவாகச் சமைக்க இது உதவுகிறது. அலுமினியம் மற்றும் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் என இரண்டு வகைக் குக்கர்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன.
அலுமினியக் குக்கர்கள் விலை குறைவாகவும், எடை குறைவாகவும் இருக்கும். இவற்றைக் கையாள்வதும் சுத்தம் செய்வதும் எளிது. அலுமினியம் வெப்பத்தை விரைவாகக் கடத்துவதால் உணவு சீக்கிரம் சூடாக உதவுகிறது. குறைந்த செலவில் குக்கர் வாங்க விரும்புபவர்களுக்கு இது ஏற்ற தேர்வாக இருக்கலாம்.
இருப்பினும், அலுமினியக் குக்கரில் சமைக்கும்போது உணவின் அமிலத்தன்மை, உப்பின் அளவு, சமைக்கும் நேரம் போன்ற காரணிகளைப் பொறுத்து சிறிதளவு அலுமினியம் உணவில் கலக்கலாம். குறிப்பாக, தக்காளி, புளி, எலுமிச்சை போன்ற அமிலத்தன்மை கொண்ட பொருட்களை அடிக்கடி சமைக்கும்போது கவனமாக இருக்க வேண்டும்.
குக்கரின் உட்புறம் அதிகமாகச் சிதைந்திருந்தாலோ, அரிக்கப்பட்டிருந்தாலோ தொடர்ந்து பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அதேசமயம், அலுமினியக் குக்கரில் சமைப்பதால் அனைவருக்கும் உடல்நலப் பாதிப்பு ஏற்படும் என்று கூறுவதற்குப் போதுமான ஆதாரங்கள் இல்லை. எனவே, தரமான தயாரிப்பைத் தேர்வு செய்து முறையாகப் பராமரிப்பது அவசியம்.
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் குக்கர்கள் உறுதியானவை; சரியான பராமரிப்புடன் நீண்ட காலம் பயன்படுத்தலாம். தரமான துருப்பிடிக்காத எஃகு உணவுடன் எளிதில் வினைபுரியாத தன்மை கொண்டது. எனவே, தக்காளி, புளி போன்ற அமிலத்தன்மை கொண்ட பொருட்களைச் சமைப்பதற்கும் இது ஏற்றதாக இருக்கும்.
எஃகுக் குக்கர்கள் பொதுவாக அலுமினியக் குக்கர்களைவிட விலை அதிகமாகவும், எடை கூடுதலாகவும் இருக்கும். எஃகு வெப்பத்தை மெதுவாகக் கடத்துவதால், சீரான வெப்பப் பரவலுக்காக அடிப்பகுதியில் அலுமினிய அடுக்கு கொண்ட பல அடுக்கு குக்கர்களைத் தேர்வு செய்யலாம்.