தினத்தந்தி
மூங்கில் அரிசி என்பது காடுகளில் வளரக்கூடிய மூங்கில் மரத்தின் பூவில் இருந்து கிடைக்கும் அரிசியாகும். இது அதிகமான ஊட்டச்சத்துகள் மற்றும் மருத்துவ குணங்கள் கொண்டதாக கருதப்படுகிறது.
மூங்கில் மரம் சுமார் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும். அந்த பூவிற்குள் அரிசி உருவாகும். பூத்த பிறகு அந்த மூங்கில் மரம் உலர்ந்து விடும் என்று கூறப்படுகிறது.
மூங்கில் அரிசி உறுதியானதும் சத்துக்கள் நிறைந்ததுமாகும். இது உடலில் உள்ள வாதம், பித்தம், கபம் போன்ற தோஷங்களை சமநிலைப்படுத்துவதுடன் உடலில் உள்ள நச்சுக்களையும் நீக்க உதவுகிறது.
ஒரு கப் அளவு மூங்கில் அரிசியில் சுமார் 160 கலோரி சக்தி உள்ளது. மேலும் கார்போஹைட்ரேட், புரதம், மக்னீசியம், காப்பர், ஜிங்க், தயமின், ரிபோஃப்ளேவின் போன்ற உடலுக்கு தேவையான பல கனிமச் சத்துகளும் இதில் உள்ளன.
மூங்கில் அரிசியால் தயாரிக்கப்படும் உணவுகளை சாப்பிடுவதால் பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் மற்றும் ஆஸ்துமா போன்ற பிரச்சினைகள் குறைய உதவுகிறது.
மேலும், மூங்கில் அரிசி உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும், சர்க்கரை நோயை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு ஏற்படும் வைட்டமின் குறைபாடுகளை சரி செய்யும் தன்மை கொண்டதால் கர்ப்பிணிப் பெண்கள் மூங்கில் அரிசி உணவுகளை அளவோடு எடுத்துக்கொள்ளலாம்.
இது உடலுக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. மேலும் உடல் எடையை சீராக வைத்திருக்கவும் உதவுகிறது.
பழங்குடி மற்றும் மலைவாழ் மக்கள் அடிக்கடி மூங்கில் அரிசி உணவுகளை சாப்பிடுவதால் அவர்களிடம் குழந்தையின்மை பிரச்சினை மிகவும் குறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.