தினத்தந்தி
வாழைப்பழம் சேர்த்து செய்யப்படும் இந்த பருப்பு பாயாசம் சுவையாகவும் மணமாகவும் இருக்கும். வீட்டிலேயே எளிதாக தயாரித்து அனைவரும் விரும்பி சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்; வாழைப்பழத் துண்டுகள் – 1 கப், பாசிப்பருப்பு – 1 கப், பால் – ½ கப், தேங்காய்ப்பால் – 2 கப், வெல்லம் – ¾ கப், ஏலக்காய்த்தூள் – ½ டீஸ்பூன், முந்திரி – தேவையான அளவு, திராட்சை – தேவையான அளவு, நெய் – 1 ஸ்பூன்.
முதலில் பாசிப்பருப்பை நன்றாகக் கழுவி, குழையும் வரை வேகவைத்து மசித்துக் கொள்ளவும். பருப்பு நன்றாக வெந்ததும் தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
முந்திரியை ஒரு ஸ்பூன் நெய்யில் பொன்னிறமாக வறுத்துக் கொள்ளவும். அதே நெய்யில் வாழைப்பழத் துண்டுகளையும் லேசாக வதக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்.
வெல்லத்தில் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். வெல்லம் முழுவதும் கரைந்ததும் அதை வடிகட்டி, தேவையற்ற தூசிகளை நீக்கிக் கொள்ளவும்.
மசித்த பாசிப்பருப்பில் வடிகட்டிய வெல்லப் பாகை சேர்த்து நன்றாகக் கலக்கவும். இதை சிறிது நேரம் கொதிக்க விடவும்.
பின்னர் வதக்கிய வாழைப்பழத் துண்டுகளை சேர்த்து கிளறவும். அதனுடன் தேங்காய்ப்பாலையும் சேர்த்து மிதமான தீயில் பச்சை வாசனை போகும் வரை கிளறிக் கொண்டிருக்கவும்.
இறுதியாக ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி மற்றும் திராட்சையை சேர்த்து நன்றாகக் கலக்கவும். தேவையான பதம் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
சுவையான வாழைப்பழ பருப்பு பாயாசம் தயார். இதை சூடாகவோ அல்லது ஆறவைத்தோ பரிமாறலாம்.