தினத்தந்தி
கருப்பு கொண்டைக்கடலையில் புரதம், நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது. சுவையான, ஆரோக்கியமான கருப்பு கொண்டைக்கடலை குழம்பை வீட்டிலேயே எளிதாக செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்: கருப்பு கொண்டைக்கடலை – ¾ கப், பெரிய வெங்காயம் – 1, பூண்டு – 12 பல், புளி – 1 தேக்கரண்டி, துருவிய தேங்காய் – 3 முதல் 4 தேக்கரண்டி, சாம்பார் பொடி – 3 தேக்கரண்டி, மஞ்சள்தூள் – ¼ தேக்கரண்டி, மிளகுத்தூள் – ¼ தேக்கரண்டி, நல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி, கடுகு – ¾ தேக்கரண்டி, வெந்தயம் – ½ தேக்கரண்டி, உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி, துவரம்பருப்பு – 2 தேக்கரண்டி, சீரகம் – 2 தேக்கரண்டி, கறிவேப்பிலை – 1 கொத்து, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கருப்பு கொண்டைக்கடலையை இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் தேவையான தண்ணீர் மற்றும் சிறிதளவு உப்பு சேர்த்து பிரஷர் குக்கரில் 2 விசில் வரும் வரை வேக வைக்கவும்.
புளியை வெந்நீரில் 30 நிமிடம் ஊறவைத்து, 2 கப் தண்ணீர் சேர்த்து புளிச்சாறு எடுத்து வைத்துக் கொள்ளவும்.
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி, கடுகு, வெந்தயம், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
பின்னர் இரண்டாக நறுக்கிய பூண்டை சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடிப் பதம் வரும் வரை வதக்கவும்.
அதன்பின் புளிச்சாறு, மஞ்சள்தூள், சாம்பார் பொடி, தேவையான உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
வேக வைத்த கருப்பு கொண்டைக்கடலை, துருவிய தேங்காய் மற்றும் மேலும் 1 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். குழம்பு சற்று கெட்டியான பதத்திற்கு வந்ததும் மிளகுத்தூள் தூவி கலந்து இறக்கவும்.