கருஞ்சீரகம்: சிறிய விதை… பெரிய நன்மைகள்!

தினத்தந்தி

சித்த மருத்துவத்தில் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வரும் மிகப் பழமையான மூலிகை கருஞ்சீரகம். அரபு நாடுகளில் கருஞ்சீரகம் அதிகளவில் உணவில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் அவர்களுக்கு இதயம் சார்ந்த நோய்கள் குறைவாக ஏற்படுகின்றன என்று கருதப்படுகிறது.

கருஞ்சீரகத்தின் சிறப்புகள், அதில் உள்ள மருத்துவ குணங்கள், குணமாகும் நோய்கள் மற்றும் பயன்படுத்தும் முறைகள் குறித்து விரிவாக காண்போம்.

பிரசவத்திற்குப் பிறகு பயன்பாடு: பிரசவத்திற்குப் பிறகு பெண்களுக்கு ஏற்படும் வலி மற்றும் சோர்வு குறைய, கருஞ்சீரகத்தை தேனுடன் அரைத்து கொடுக்கலாம். இது தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும், கருப்பையை இயல்பு நிலைக்கு கொண்டு வரவும் உதவும்.

கருப்பையில் சேரும் அழுக்குகளை நீக்க, ஒரு டேபிள்ஸ்பூன் கருஞ்சீரகப் பொடியுடன் பனை வெல்லம் சேர்த்து சாப்பிடலாம். குழந்தை பெற்ற மூன்றாம் நாளிலிருந்து தொடர்ந்து 5 நாட்கள் எடுத்துக்கொள்ளலாம்.

தோல் நோய்களுக்கு: கருஞ்சீரகத்தை அரைத்து நல்லெண்ணெய்யில் கலந்து, கரப்பான் மற்றும் சிரங்கு உள்ள இடங்களில் பூசினால் நல்ல பலன் கிடைக்கும்.

மூச்சு மற்றும் சளி பிரச்சினைகள்: கருஞ்சீரகப் பொடியை தேன் அல்லது நீரில் கலந்து உட்கொண்டால் மூச்சுமுட்டல் குறையும். மழை மற்றும் குளிர்காலங்களில் ஏற்படும் மூக்கடைப்புக்கும் இது பயனுள்ளதாகும்.

கற்கள் (Kidney/Gall stones): ஒரு டீஸ்பூன் கருஞ்சீரகப் பொடியை வெந்நீர் அல்லது தேனில் கலந்து காலை, மாலை இருவேளையும் குடித்தால் சிறுநீரக மற்றும் பித்தப்பை கற்கள் படிப்படியாக கரைய உதவும் என்று கூறப்படுகிறது.

நீரிழிவு கட்டுப்பாடு: தினமும் காலையில் வெறும் வயிற்றில் கருஞ்சீரகம் கொதிக்க வைத்த நீரை குடித்தால் நீரிழிவு கட்டுப்பாட்டில் இருக்கும்.

புற்றுநோய் தடுப்பு: கருஞ்சீரகத்தில் உள்ள தைமோகுயினோன் (Thymoquinone) என்னும் கூறு புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்க உதவுகிறது என்று ஆய்வுகள் கூறுகின்றன. இது ரத்த புற்றுநோய், மார்பக மற்றும் வாய் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை குறைக்க உதவலாம்.

இவை பாரம்பரிய மருத்துவ தகவல்கள். எந்தவொரு நோய்க்கும் சிகிச்சையாக பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரின் ஆலோசனை அவசியம்.

ஒரு கைப்பிடி பிஸ்தா… பல ஆரோக்கிய நன்மைகள்!