தினத்தந்தி
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரையில் எல்லோருக்கும் பிடித்தமான உணவுப் பொருளில் முட்டைக்கு மிக முக்கிய பங்கு உண்டு. அவித்த முட்டை, முட்டை பொறியல், ஆம்லெட் என்று வெவ்வேறு வெரைட்டியாக முட்டையை நாம் சுவைத்து வருகிறோம்.
ஒரு முட்டையில் 72 கலோரிகள், 6 கிராம் புரதம், 5 கிராம் ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்டவை இருக்கின்றன. நம் தசைகளின் வளர்ச்சி மற்றும் சீரமைப்புக்கு ஏதுவான அமினோ அமிலங்கள் முட்டையில் உள்ளன.
முட்டையில் பல வகை இருந்தாலும், அவித்த முட்டை என்பது தனி வெரைட்டியாகவும், மற்றவை ஆம்லெட் சார்ந்த வெரைட்டியாகவும் பார்க்கப்படுகின்றது. ஆனால், முட்டையை எப்படி சாப்பிட்டால் ஊட்டச்சத்து அதிகம் என்ற குழப்பம் நமக்கு வருகிறது.
முட்டையில் விட்டமின் டி, பி12 மற்றும் ரிபோபிளேவின் போன்ற சத்துக்கள் உள்ளன. நம் உடலில் ஆற்றலை உற்பத்தி செய்வதற்கும், ஒட்டுமொத்த இயக்கத்திற்கும் இது பலன் உள்ளதாக அமையும்.
அவித்த முட்டையில் ஊட்டச்சத்துக்கள் நேரடியாக கிடைக்கின்றன. முட்டையை அவிப்பதால் அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முழுமையாக காக்கப்படுகின்றன. இதில் விட்டமின் பி12, டி மற்றும் ரிபோஃபிளேவின் ஆகிய சத்துக்கள் மிகுதியாக கிடைக்கும்.
ஆம்லெட்டில் புரதம் நிறைவாக கிடைக்கும் என்றாலும், இதை சமைப்பதற்கு நாம் பயன்படுத்தும் வெண்ணெய் அல்லது எண்ணெய் மூலமாக ஆரோக்கியமற்ற கொழுப்புகள் சேரலாம். சேர்க்கப்படும் இதர மூலப் பொருட்களினால் இதன் ஊட்டச்சத்து அளவுகள் மாற்றம் அடையலாம்.
இவை இரண்டில் சிறந்தது என்று எடுத்துக் கொண்டால் அவித்த முட்டைதான் மிகவும் நல்லது. புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் இதில் காக்கப்படும். ஆம்லெட்டில் புரதம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் அதிகம் என்றாலும் அதில் கலோரிகள், கொழுப்புகள் போன்றவை அதிகம் சேரும்.
ஒரு நாளைக்கு ஓன்று அல்லது இரண்டு முட்டைகள் சாப்பிடலாம். புரதம், விட்டமின் மற்றும் மினரல்கள் நிறைவாக கிடைக்கும்.