தினத்தந்தி
உணவுப் பழக்கம் தவறாக இருந்தால் ஒவ்வாமை ஏற்படும். ஒத்துவராத சில உணவு வகைகள் அல்லது பழைய உணவுகளால் உடலில் விஷத்தன்மை சேரும். சமைத்த உணவை அப்போதே சாப்பிட்டு முடித்துவிட வேண்டும்.
பணிச்சுமை, நேரமின்மை போன்ற காரணங்களால் குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவை எடுத்து சூடு செய்து சாப்பிடுவது தவறான உணவுப் பழக்கம்.
பழைய உணவு அமிர்தத்திற்கு ஒப்பானதாக இருந்தாலும் அதை சாப்பிடக்கூடாது என சொல்கிறது சித்த மருத்துவம். பழைய உணவுகளை உண்டால் அதில் இருக்கும் நுண்கிருமிகளின் தாக்கத்தால் வாந்தி, காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படும்.
இரவில் கீரை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். கீரையில் உள்ள பச்சையம் மற்றும் அதில் உள்ள நார்சத்துக்களை ஜீரணிக்கக்கூடிய நொதிகள் இரவில் குறைவாகவே சுரக்கும். அதனால் கீரை ஒருவித மந்தநிலையை உருவாக்கி, ஜீரணத்தில் சிக்கலை ஏற்படுத்தும்.
நெல்லிக்காய் மற்றும் பச்சை காய்கறிகளை கொண்டு செய்யப்படும் சாலட் போன்ற உணவுகளையும் இரவில் தவிர்க்க வேண்டும்.
அசைவ உணவு வகைகளில் அதிக புரதமும், கொழுப்பு சத்தும் உள்ளதால் அவைகளும் ஜீரணமாக அதிக நேரமாகும். அதனால் அவைகளையும் இரவில் உண்பதை தவிர்க்கவேண்டும்.
தயிர் எளிதில் ஜீரணமாகாத மந்ததன்மை கொண்டது. அதை இரவில் சாப்பிட்டால் கபம் அதிகரித்து, காய்ச்சல் ஏற்படக்கூடும்.
சாப்பிட்டு முடித்தவுடன் ஐஸ்கிரீம் மற்றும் இனிப்பு பொருட்கள், பழகலவைகள் சாப்பிடுவது ஜீரணத்தை பாதிக்கும். உணவின் இறுதியில் இனிப்பு உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.