தினத்தந்தி
ஞாபக மறதி அல்லது நினைவாற்றல் இழப்பு என்பது 'அம்னீசியா' எனப்படும் ஒரு நிலை. வயது முதிர்ந்தவர்களுக்கு மட்டுமல்லாமல், சில உடல்நலக் கோளாறுகளாலும் இது ஏற்படலாம். அவற்றில் முக்கியமான ஒன்றாக சர்க்கரை நோயும் கருதப்படுகிறது
நினைவாற்றல் குறைவதற்கு பல காரணங்கள் உள்ளன. பக்கவாதம், மூளைக் காயம், மூளைத் தொற்று, நீரிழிவு நோய், சில மருந்துகளின் பக்கவிளைவுகள், நீண்டகால மது அருந்துதல், தைராய்டு பிரச்சினை மற்றும் மனஅழுத்தம் போன்றவை ஞாபக மறதிக்கு வழிவகுக்கலாம்.
சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு தொடர்ந்து அதிகமாக இருந்தால், மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்படலாம். இதனால் மூளைக்கு போதிய ரத்த ஓட்டம் கிடைக்காமல், நினைவாற்றல் மெல்ல குறையக்கூடும்.
உடலில் இன்சுலின் சுரப்பு குறைவது அல்லது இன்சுலின் சரியாக செயல்படாதது, மூளையின் நரம்பு செல்களின் செயல்பாட்டையும் பாதிக்கலாம். இதுவும் ஞாபக மறதி ஏற்படுவதற்கான ஒரு காரணமாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சில சர்க்கரை நோயாளிகளில், மூளையில் அமிலாய்டு புரதங்கள் அதிகமாக சேரும் வாய்ப்பு இருப்பதாகவும், அது நினைவாற்றலை பாதிக்கக்கூடும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக சமீபத்தில் நடந்த விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்வதில் சிரமம் ஏற்படலாம்.
நினைவாற்றல் குறைவதை உணர்ந்தால், அதை அலட்சியப்படுத்தாமல் மருத்துவரை அணுக வேண்டும். தேவையான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மூலம் நினைவாற்றலை மேம்படுத்த உதவ முடியும்.
சர்க்கரை நோயாளிகள் தினசரி உணவில் காய்கறிகள், பழங்கள், முழுத் தானியங்கள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை சேர்க்க வேண்டும். மேலும், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன், வால்நட் போன்ற உணவுகளும் மூளை ஆரோக்கியத்திற்கு உதவக்கூடும்.
தினமும் உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்வது, உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது மற்றும் ரத்த சர்க்கரை அளவை சீராக பராமரிப்பது நினைவாற்றலை பாதுகாக்க உதவும். அதேபோல் புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போன்ற பழக்கங்களைத் தவிர்ப்பதும் முக்கியம்.
தினமும் குறைந்தது 6 மணி நேரம் தரமான தூக்கம் பெறுவது, மனஅழுத்தத்தை குறைப்பது மற்றும் மருத்துவரின் ஆலோசனைப்படி சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஞாபக மறதி அபாயத்தைக் குறைக்க உதவும். ஆரோக்கியமான வாழ்க்கை முறையே நினைவாற்றலை நீண்ட காலம் பாதுகாக்கும் முக்கியமான வழியாகும்.