தாய்ப்பால் கொடுக்கும் போது அலைபேசி பயன்படுத்தலாமா?

தினத்தந்தி

தாய்மை பெண்மையின் உச்சம் என்றால், தாய்ப்பால் தாய்மையின் உச்சமாக கருதப்படுகிறது. குழந்தைக்கும் தாய்க்கும் இடையிலான முதல் உணர்வுப் பிணைப்பு தாய்ப்பால் ஊட்டும் தருணங்களில்தான் உருவாகிறது.

ஆனால் இன்றைய காலத்தில் சில இளம் தாய்மார்கள், தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தில் அலைபேசி பயன்படுத்துவது அல்லது தொலைக்காட்சி பார்ப்பது போன்ற பழக்கங்களில் ஈடுபடுகின்றனர். இது தாய்-குழந்தை உணர்வுப் பிணைப்பை பாதிக்கக்கூடும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தாய்ப்பால் ஊட்டும் போது அலைபேசி பயன்படுத்துவதை ஆங்கிலத்தில் “ப்ரெக்ஸ்டிக்” என்று குறிப்பிடுகின்றனர். இது தொடர்பாக உலகம் முழுவதும் பல ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பார்வை தொடர்பு குறைவு: அலைபேசி அல்லது தொலைக்காட்சியில் கவனம் செலுத்தும் போது, தாயும் குழந்தையும் நேரடியாக ஒருவரை ஒருவர் பார்க்கும் வாய்ப்பு குறைகிறது. இதனால் உணர்ச்சி ரீதியான இணைப்பு பாதிக்கப்படலாம்.

குழந்தையின் கவனம் சிதறலாம்: தாயின் கவனம் வேறு இடத்தில் இருப்பதை குழந்தைகள் உணரக்கூடும். இதனால் குழந்தையும் பால் குடிப்பதில் முழு கவனம் செலுத்தாமல் இருக்கலாம். இது குழந்தையின் கவனிக்கும் திறனை பாதிக்கக்கூடும் என்று உளவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சரியான முறையில் பாலூட்ட முடியாமை: தாயின் கவனம் சிதறும்போது, குழந்தை சரியாக பால் பிடித்து குடிக்கிறதா, தேவையான அளவு பால் கிடைக்கிறதா போன்ற விஷயங்கள் கவனிக்கப்படாமல் போகலாம். இதனால் குழந்தைக்கு போதுமான தாய்ப்பால் கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளது.

கதிர்வீச்சு பாதிப்பு: குழந்தைகள் வளர்ச்சியின் ஆரம்ப நிலையில் இருப்பதால், அலைபேசி மற்றும் தொலைக்காட்சி போன்ற சாதனங்களின் கதிர்வீச்சுகள் அவர்களை அதிகமாக பாதிக்கக்கூடும் என கூறப்படுகிறது. எனவே குழந்தைகளின் அருகில் இச்சாதனங்களை குறைவாக பயன்படுத்துவது நல்லது.

வளர்ச்சி மாற்றங்களை கவனிக்க தவறுதல்: தாய்ப்பால் கொடுக்கும் நேரம் என்பது குழந்தையின் முகபாவனை, அசைவுகள், உடல் மாற்றங்கள் போன்றவற்றை கவனிக்க சிறந்த தருணமாகும். ஆனால் அலைபேசியில் கவனம் செலுத்துவதால், குழந்தையின் வளர்ச்சியில் ஏற்படும் சில முக்கிய மாற்றங்கள் கவனத்திற்கு வராமல் போகலாம்.

தாய்ப்பால் கொடுக்கும் நேரத்தில் முழு கவனத்தையும் குழந்தையின் மீது செலுத்துவது, தாயும் குழந்தையும் இடையிலான உறவை வலுப்படுத்த உதவும்.

தினமும் துளசி நீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!