தினத்தந்தி
குழந்தைகளுக்கு சிக்கன் என்றால் மிகவும் பிடிக்கும். அதிலும் சீஸ் சேர்த்து செய்யும் சிக்கன் சீஸ் பால்ஸ் இன்னும் சுவையாக இருக்கும். மாலை நேர ஸ்நாக்ஸாகவும், விருந்தினர்களுக்கு பரிமாறவும் ஏற்ற இந்த ரெசிபியை வீட்டிலேயே எளிதாக செய்து அசத்தலாம்.
தேவையான பொருட்கள்: கால் கிலோ எலும்பில்லாத சிக்கன், முட்டை – 1, இஞ்சி – சிறிய துண்டு, பூண்டு – 3 பல், பச்சை மிளகாய் – 1, வெண்ணெய் – 1 டீஸ்பூன், கார்ன் பிளேக்ஸ் – 1 கப், சோள மாவு – ½ கப், சீஸ் – தேவையான அளவு, பால் – 3 டேபிள் ஸ்பூன், ரொட்டி – 1 துண்டு, உப்பு – ருசிக்கேற்ப, காஷ்மீரி மிளகாய்த்தூள் – ½ டீஸ்பூன்.
செய்முறை : சிக்கனை நன்றாக சுத்தம் செய்து வைத்துக்கொள்ளவும். பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் மஞ்சள்கருவை தனித்தனியாகப் பிரித்து வைத்துக்கொள்ளவும்.
மிக்சியில் சிக்கன், காஷ்மீரி மிளகாய்த்தூள், முட்டையின் மஞ்சள்கரு, உப்பு, நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு, உருக்கிய வெண்ணெய் மற்றும் ரொட்டித்துண்டை சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
அரைத்த கலவையை ஒரு பாத்திரத்தில் மாற்றி, கைகளில் சிறிதளவு எண்ணெய் தடவி, சிக்கன் கலவையை சிறிய உருண்டைகளாக எடுக்கவும். ஒவ்வொரு உருண்டையின் நடுவிலும் ஒரு சிறிய சீஸ் துண்டை வைத்து மூடி உருட்டிக்கொள்ளவும்.
பின்னர் அந்த உருண்டைகளை முதலில் சோள மாவில், அடுத்து முட்டையின் வெள்ளைக்கருவில், இறுதியாக பொடித்த கார்ன் பிளேக்ஸில் தோய்த்து தனியாக அடுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெயை சூடாக்கி, மிதமான தீயில் இந்த உருண்டைகளை பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்.
வெளியில் மொறுமொறுப்பாகவும், உள்ளே உருகிய சீஸ் நிறைந்தும் இருக்கும் இந்த சிக்கன் சீஸ் பால்ஸ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவரும் சுவையான சிற்றுண்டியாக இருக்கும்