தினத்தந்தி
நெத்திலி கருவாடு வைத்து செய்யும் வறுவல், சுவையிலும் மணத்திலும் தனி இடம் பிடிக்கும். சூடான சாதம், சாம்பார் அல்லது ரசத்துடன் சேர்த்து சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்: நெத்திலி கருவாடு – 100 கிராம், தேங்காய் எண்ணெய் – 50 மில்லி, மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன், மஞ்சள்தூள் – ½ ஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: நெத்திலி கருவாட்டை வெந்நீரில் 5 நிமிடங்கள் ஊறவைத்து, பின்னர் அதிலுள்ள மண், தலை மற்றும் தேவையற்ற பகுதிகளை நீக்கி நன்றாக கழுவிக்கொள்ளவும்.
அதன்பின் மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து நன்றாகப் பிரட்டி 10 நிமிடங்கள் ஊறவிடவும்.
கடாயில் தேங்காய் எண்ணெயை சூடாக்கி, ஊறவைத்த கருவாட்டை சேர்த்து மிதமான தீயில் வறுக்கவும். இடையிடையே கிளறி, கருவாடு பொன்னிறமாக மொறு மொறுப்பாகும் வரை வறுத்தெடுக்கவும்.
சூடான சாதம், சாம்பார் அல்லது ரசத்துடன் இந்த நெத்திலி கருவாடு வறுவலை சேர்த்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.
குறிப்பு: வறுக்கும் போது சிறிதளவு மிளகுத்தூள் மற்றும் பூண்டு சேர்த்தால் சுவையும் மணமும் மேலும் அதிகரிக்கும்.