இனிப்பான தேங்காய் போளி செய்வது எப்படி?

தினத்தந்தி

தேங்காய் போளி என்பது பாரம்பரியமான இனிப்பு வகைகளில் ஒன்றாகும். எளிய பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே சுவையாக செய்யக்கூடிய இந்த போளி, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பு உணவாகும்.

தேவையான பொருட்கள்: மைதா அல்லது கோதுமை மாவு – 2 கப், தேங்காய்த்துருவல் – 1 கப், வெல்லம் (பொடித்தது) – 1 கப், சுக்குப் பொடி – ½ டீஸ்பூன், ஏலக்காய்த்தூள் – ½ டீஸ்பூன், நெய் – தேவையான அளவு, நல்லெண்ணெய் – 4 டீஸ்பூன், மஞ்சள்தூள் – 1 சிட்டிகை, உப்பு – ½ டீஸ்பூன்.

செய்முறை: மாவுடன் உப்பு, மஞ்சள்தூள், சிறிது நெய் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். பின்னர் அதன் மேல் நல்லெண்ணெய் தடவி, குறைந்தது அரை மணி நேரம் மூடி வைக்கவும்.

வெல்லத்தில் கால் கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டவும். பின்னர் அந்த வெல்லப்பாகை மீண்டும் அடுப்பில் வைத்து கொதிக்கவிட்டு, தேங்காய்த்துருவலை சேர்த்து கெட்டியாகும் வரை கிளறவும். அதன்பின் சுக்குப் பொடி மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து கலந்து இறக்கி ஆறவிடவும்.

பிசைந்த மாவில் எலுமிச்சை அளவு உருண்டை எடுத்து சிறிது தட்டி, அதனுள் தேங்காய் பூரணத்தை வைத்து நன்றாக மூடவும். பின்னர் நெய் தடவிய வாழை இலை அல்லது பிளாஸ்டிக் தாளில் வைத்து மெதுவாக சப்பாத்தி போல தட்டவும்.

சூடான தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் சிறிதளவு நெய் ஊற்றி இருபுறமும் பொன்னிறமாக சுட்டெடுக்கவும்.

சுவையான, மணமான தேங்காய் போளி தயார். நெய்யுடன் பரிமாறினால் அதன் சுவை மேலும் அதிகரிக்கும்.

குறிப்பு: மைதா மாவுக்கு பதிலாக கோதுமை மாவைப் பயன்படுத்தலாம். இதே முறையில் கடலைப்பருப்பு பூரணம் வைத்து பருப்பு போளியும் செய்யலாம்.

பயனுள்ள சமையல் குறிப்புகள்!